‘குட்கா’ ஊழல் வழக்கு: இன்ஸ்பெக்டர் சம்பத்தை வீட்டுக்கு அழைத்து சென்று சோதனை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை தீவிரம்

குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக இன்ஸ்பெக்டர் சம்பத்தை அவரது வீட்டுக்கு அழைத்து சென்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Update: 2018-09-15 22:15 GMT
சென்னை, 

குட்கா ஊழல் வழக்கில், ஆலை உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் சீனிவாசராவ், உமா சங்கர் குப்தா, மத்திய கலால் துறை அதிகாரி என்.கே.பாண்டியன், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில்முருகன் ஆகிய 5 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேல் விசாரணைக்காக அவர்களை கடந்த 10-ந்தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் காவலில் எடுத்தனர். அவர்களுக்கு 4 நாட்கள் சி.பி.ஐ. காவல் வழங்கி சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து 5 பேரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு கேள்விகளுடன் கிடுக்கிப்பிடி விசாரணையை மேற்கொண்டனர்.

மாதவராவ், சீனிவாசராவை செங்குன்றத்தில் உள்ள குட்கா ஆலைக்கு அழைத்து சென்றும் அதிகாரிகள் விசாரித்தனர். இந்தநிலையில் 5 பேரின் சி.பி.ஐ. காவல் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது.

இதையடுத்து 5 பேரும் சி.பி.ஐ.கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது மாதவராவ், சீனிவாசராவ் ஆகிய 2 பேரிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டும் என்று சி.பி.ஐ. தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட சி.பி.ஐ. கோர்ட்டு 2 பேருக்கான காவலை மேலும் 3 நாட்கள் நீட்டித்து அனுமதி வழங்கியது. மற்ற 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மாதவராவ், சீனிவாசராவிடம் 5-வது நாளாக நேற்று விசாரணை நீடித்தது. அவர்களை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

‘குட்கா’ ஊழல் வழக்கில் சிக்கிய தூத்துக்குடி சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத்திடம் விசாரணை நடத்துவதற்காக சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி அவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு ஆஜராகினார். அவரிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணை முடிவில், அவரை மீண்டும் ஆஜராக வேண்டும் என்று நிபந்தனையுடன் சி.பி.ஐ. அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். அதன்படி இன்ஸ்பெக்டர் சம்பத் சென்னை நுங்கம்பாக்கம் சி.பி.ஐ. அலுவலகத்தில் நேற்று 2-வது நாளாக விசாரணைக்கு ஆஜராகினார்.

சி.பி.ஐ. அதிகாரிகள் 35 இடங்களில் சோதனை நடத்தியபோது சென்னை ராயபுரம் போலீஸ் குடியிருப்பில் இன்ஸ்பெக்டர் சம்பத் பயன்படுத்தி வந்த வீட்டுக்கு ‘சீல்’ வைத்தனர். நேற்று அந்த வீட்டுக்கு சம்பத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் அதிகாரிகள் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். சம்பத்திடம் இறுதிக்கட்ட விசாரணை முடியும்போது, அவர் கைது செய்யப்படலாம் என்று சி.பி.ஐ. வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாதவராவ், சீனிவாசராவ், இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோரை மிகவும் ரகசியமாகவே சி.பி.ஐ. அதிகாரிகள் வெளியில் அழைத்து சென்று விசாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்