பதவி பறிபோய் விடுமோ என்ற பதற்றத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகிறார் கமல்ஹாசன் பேட்டி

அமைச்சர் ஜெயக்குமார் பதவி பறிபோய் விடுமோ என்ற பதற்றத்தில் பேசுகிறார் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

Update: 2018-10-02 22:30 GMT
உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் களியாம்பூண்டி கிராமத்தில் நேற்று காந்தி ஜெயந்தியையொட்டி கிராமசபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு களியாம்பூண்டி கிராம மூத்த உறுப்பினர் கே.சுதாகர் தலைமை தாங்கினார். உதவி திட்ட அதிகாரி ஜோதி முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் மாரிச்சாமி கிராமசபை கூட்டத்தில் தீர்மானங்களை வாசித்து ஒப்புதல் பெற்றார்.

இந்த கிராமசபை கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பார்வையாளராக கலந்துகொண்டார்.

கூட்டம் முடிந்த பின்பு பொதுமக்களிடம் கமல்ஹாசன் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

உத்திரமேரூர் ஒன்றியம் களியாம்பூண்டி கிராமத்தில் நடந்த இந்த கிராமசபை கூட்டத்தில் பார்வையாளராக கலந்துகொள்ள வந்த என்னை பெருந்தன்மையுடன் அனுமதித்த கிராம மக்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 25 ஆண்டுகளாக கிராமசபை என்ற ஆயுதம் நம் கையில் இருந்தாலும் அதை சரிவர இயக்காத நிலையில், கிராம மக்கள் அதை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக வந்தேன்.

கிராமசபை கூட்டங்களில் நடைபெறும் தீர்மானங்களை சுவரொட்டிகளாக அடித்து முக்கிய இடங்களில் கிராமங்களில் ஒட்டினால் மக்கள் அதை பார்த்து இந்த பணிகள் இன்னும் நடைபெறவில்லை என்பதை தெரிந்துகொள்வார்கள். தமிழ்நாட்டில் மொத்தம் 12 ஆயிரத்து 524 கிராமசபை கூட்டங்கள் நடைபெறுகிறது. இந்த கூட்டங்களில் மக்கள் நீதி மய்யம் பங்கெடுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: மக்கள் நீதி மய்யம் சொல்லும் யோசனையை ஓடும் தண்ணீரில்தான் எழுத வேண்டும் என்று மக்கள் அதிகார அமைப்பு குற்றம் சாட்டியுள்ளதே?

பதில்: மனதில் எழுதிவிட்டால் போதும். தண்ணீரில் எழுதினாலும் அடுத்த ஊருக்கு போய் சேர்ந்துவிடும்.

கேள்வி: ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு 3 இடங்களில் அனுமதியை மத்திய அரசு வழங்கியிருக்கிறதே?

பதில்: மக்களின் மனநிலையை மதிக்காத அரசு என்றுதான் செல்லவேண்டும். இதில் அனைத்து பதில்களும் அடங்கியிருக்கிறது.

கேள்வி: நீங்கள் திரைத்துறையில் முதல் இன்னிங்ஸ் முடித்துவிட்டு, 2-வது இன்னிங்ஸ் அரசியலுக்கு வந்துள்ளர்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளாரே?

பதில்: காந்தியடிகள் கூட தென்னாப்பிரிக்காவில் பணிபுரிந்துவிட்டு 2-வது இன்னிங்சில்தான் இங்கு சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்டார். எங்கிருந்து வருகிறோம் என்பது முக்கியமில்லை. என்ன செய்யப்போகிறோம் என்பதுதான் முக்கியம். பதவி பறிபோய்விடுமோ என்ற பதற்றத்தில் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசுகிறார். அவருக்கு ‘டிக்ஸ்னரி’(அகராதி) அனுப்பலாம் என்று இருக்கிறேன். அவங்க இயங்காத அரசு. மழை பெய்தாலும் அவர்கள் முதுகில் ஈரம் படவில்லை. நிதானமாக நடந்து போய்க்கொண்டிருக்கிறார்கள்.

கேள்வி: நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுமா?

பதில்: கண்டிப்பாக போட்டியிடும். அதற்குண்டான அனைத்து தயாரிப்புகளும் செய்து வருகிறோம்.

கேள்வி: தி.மு.க.வுடன் கூட்டணி என்று பேச்சு அடிபடுகிறதே?

பதில்: எனக்கு தெரிந்து கிடையாது.

கேள்வி: முழுநேர அரசியலில் எப்போது ஈடுபடுவீர்கள்?

பதில்: முழுநேர அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற அவசியமே இல்லை. இதற்கென்று சிறிது நேரம் ஒதுக்கினாலே போதும். அது யாராக இருந்தாலும். நடிப்பது கூட எனக்கு முழு நேர தொழிலல்ல.

கேள்வி: தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசு புறக்கணிக்கிறதே?

பதில்: மக்களுக்கு செவிசாய்க்காத அரசு என்னவாகும் என்பதை சரித்திரம் சொல்லும்.

கேள்வி: மத்திய அரசு கிராம வளர்ச்சிக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்கிறது என்று நினைக்கிறீர்களா?

பதில்: நிதி ஒதுக்கினால் மட்டும் வந்து சேர்ந்துவிடுமா?

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

வைகுண்ட பெருமாள் கோவில்

முன்னதாக களியாம்பூண்டி செல்வதற்கு முன்பு உத்திரமேரூர் வந்த கமலஹாசன் தனது திறந்த காரில் நின்றபடி பொதுமக்களிடம் சிறிது நேரம் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:- சென்னைக்கு அருகில் மிக அழகான ஊர் உள்ளதை கண்டு மகிழ்ச்சியடைகிறேன். இதற்கு முன்பு 2 முறை கிராமசபை கூட்டங்களில் கலந்துகொண்டிருந்தாலும், அதிகாரப்பூர்வமாக மக்களுடன் சென்று கலந்துகொள்வது இதுதான் முதல்முறை. மக்களுடன் மக்களாக கூட்டத்தில் கலந்துகொள்ள செல்வதற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். விழிப்புணர்வு ஏற்படுத்தவே கிராமசபை கூட்டத்திற்கு செல்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் உத்திரமேரூர் வைகுண்ட பெருமாள் கோவிலில் உள்ள குடவோலை முறை குறித்த கல்வெட்டை பார்வையிட்டு அதுகுறித்த விளக்கங்களை கேட்டறிந்தார்.

மேலும் செய்திகள்