மோகன் சி.லாசரஸ் மீது எந்த அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது? போலீசார் விளக்கம் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

மோகன் சி.லாசரஸ் மீது எந்த அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்று நாகர்கோவில் போலீசார் விளக்கம் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2018-10-09 22:15 GMT
மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியை சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி.லாசரஸ். இவர் ஒரு கிறிஸ்தவ கூட்டத்தில் பேசியபோது, இந்து மதத்தை பற்றி அவதூறாக பேசியதாகவும், அது தொடர்பான வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவியதாகவும் தூத்துக்குடி, கோவை, சேலம் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் அவர் மீது புகார்கள் கொடுக்கப்பட்டன.

அதன் அடிப்படையில் போலீசார், மோகன் சி.லாசரஸ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தநிலையில் ஒரு புகாரின்பேரில் தன் மீது நாகர்கோவில் கோட்டார் போலீசார் பதிவு செய்த வழக்கில் முகாந்திரம் இல்லை என்றும், அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் மோகன் சி.லாசரஸ் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மோகன் சி.லாசரஸ் சார்பில் ஆஜரான வக்கீல், “மனுதாரர் 18.3.2014 அன்று சென்னையில் மதம் தொடர்பான ஒரு கூட்டத்தில் பேசியுள்ளார். ஆனால் கடந்த 23.9.2018 அன்று மதுரையில் அவர் பேசியதாக, வீடியோ பரவியதாக கொடுக்கப்பட்ட புகாரின்பேரின் சேலம் செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

ஆனால் அன்றைய தினம் மனுதாரர் வெளிநாட்டில் இருந்தார். அதேபோல அவர் மீது நாகர்கோவில் கோட்டார் போலீசில் கொடுக்கப்பட்ட புகாரில், அவர் எந்த இடத்தில் எப்போது பேசினார் என்பதற்கான ஆதாரங்கள் இணைக்கப்படவில்லை. பொதுவாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையிலேயே போலீசார் சார்பில் இதுவரை 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன” என்று வாதாடினார்.

இந்த வாதத்தை கேட்ட நீதிபதி, ‘மனுதாரர் பேசியதாக கூறப்படும் சம்பவம் எங்கு? எப்போது நடந்தது? என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.

எனவே அவர் மீது கொடுக்கப்பட்ட புகார் மீது எந்த அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பதை நாகர்கோவில் கோட்டார் போலீசார் விளக்க வேண்டும். அதுவரை மனுதாரர் மீதான வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யக்கூடாது என்று தெரிவித்தார். பின்னர் இந்த வழக்கை வருகிற 24-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும் செய்திகள்