பல்கலைக்கழகங்களில் நடந்த ஊழல் குறித்த தொகுப்பு வேண்டுமா? டாக்டர் ராமதாஸ் அறிக்கை

பல்கலைக்கழகங்களில் நடந்த ஊழல் குறித்து பா.ம.க. தொகுத்துள்ளது, கவர்னர் அழைத்தால் அதனை வழங்க தயார் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Update: 2018-10-10 20:13 GMT
சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் கடந்த 6-ந்தேதி நடைபெற்ற உயர்கல்வி குறித்த கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழகத்தில் துணைவேந்தர் பதவிகள் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கப்பட்டதை கவர்னராக பதவியேற்ற பின்னர் நான் அறிந்து கொண்டேன். பல கோடி பணம் பரிமாற்றம் செய்யப்பட்டு தான் துணைவேந்தர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் இதை நான் நம்பவில்லை. பின்னர் அது உறுதியானவுடன் நான் மிகவும் வருத்தமடைந்தேன் என்று கூறியிருந்தார்.

ஆனால், அதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஊழல் நடந்ததாக நான் நேரடியாகக் கூறவில்லை; கல்வியாளர்கள் கூறியதைத் தான் நான் கூறினேன் என்று விளக்கமளித்து இச்சிக்கலில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.

கவர்னரிடம் நான் கேட்க விரும்பும் முதல் கேள்வி, துணைவேந்தர்கள் நியமனத்தில் பெருமளவில் ஊழல் நடந்ததாக உங்களிடம் கல்வியாளர்கள் கூறிய குற்றச்சாட்டை நீங்கள் நம்புகிறீர்களா? இல்லையா? என்பது தான்.

ஒருவேளை அத்தகைய குற்றச்சாட்டுகளை நீங்கள் (கவர்னர்) நம்பவில்லை என்றால், துணைவேந்தர் நியமனத்தில் அதுவரை இருந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்று தீர்மானித்தது ஏன்?. அதுவரை இருந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்பதற்கு என்ன பொருள்?.

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் நடந்த ஊழல்களை பா.ம.க. விரிவாக தொகுத்திருக்கிறது. கவர்னர் அழைத்தால் எந்த நேரமும் அந்த ஊழல் பட்டியலை கவர்னரிடம் தாக்கல் செய்ய தயாராக இருக்கிறோம். நேர்மையை போற்றும் கவர்னராக இருந்தால் அக்குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்க ஆணையிட வேண்டும். செய்வாரா?.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பா.ம.க. இளைஞரணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியின் செயலர் ராமசாமியின் ஊழலை தட்டிக்கேட்ட பேராசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு செப்டம்பர் மாதத்திற்கான ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் கடந்த சில ஆண்டுகளில் செய்யப்பட்ட பணி நியமனங்கள் குறித்தும், அதில் கல்லூரி செயலர் ராமசாமிக்கு உள்ள தொடர்பு குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும். கல்லூரி நிர்வாகம் யாருக்கு என்பதில் உள்ள சிக்கல்கள் களையப்படும் வரை கல்லூரி நிர்வாகத்தை தற்காலிகமாக அரசே ஏற்று நடத்த வேண்டும் என தேவாங்கர் சமுதாய பிரதிநிதிகள் கோரியிருப்பதால் அதையும் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்கு முன்பாக ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு உடனடியாக செப்டம்பர் மாத ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்