மக்கள் கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தப்படவேண்டும் டி.டி.வி. தினகரன் அறிக்கை

மக்கள் கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும், மக்களின் நலனையும், குரலையும் நசுக்க நினைக்க கூடாது என்றும் டி.டி.வி. தினகரன் கூறினார்.

Update: 2018-10-11 21:30 GMT
சென்னை,

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் நடைபெறுவது மக்கள் விரோத அரசு என்பதை ஒவ்வொரு நொடியும் நிரூபிக்கும் பழனிசாமி அரசின் மற்றொரு பாதக செயல் தான், மக்களின் கருத்து கேட்காமலேயே எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்கள் பதிக்கும் திட்டம் உள்பட பல்வேறு முக்கிய திட்டங்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல்துறை மந்திரியிடம், தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் கொடுத்திருக்கும் கோரிக்கை மனு எடுத்துரைக்கிறது.

மக்களுக்காக இயங்க வேண்டிய அரசு தன் கடமையிலிருந்து தவறி, மக்களை தவிர்த்துவிட்டு இயங்க நினைக்கும் எண்ணம் கொண்டதாக தமிழகத்தில் அமைந்துள்ளமை மிகவும் துரதிஷ்டவசமானது. மக்களின் கருத்துக்கேட்பு கூட்டங்களால், ஏற்படும் காலதாமதத்தால், முதலீட்டாளர்கள் நஷ்டப்படுகிறார்கள் என்று கூறுவது இந்த அரசு யாருக்காக இயங்கி கொண்டிருக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாக காட்டுகிறது.

கண்டனம்

வேதாந்தா போன்ற தனியார் குழுமங்கள் தங்கு தடையின்றி தங்களது சொந்த லாபத்திற்காக தமிழகத்தில் வணிகம் செய்வதற்கு மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கையினை முன்வைத்துள்ளது, மக்கள் விரோத பழனிசாமி அரசின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது. விவசாயத்தை அழிப்பதற்கும், இயற்கை வளங்களை நாசமாக்கும் திட்டங்களுக்காகவும், மக்களின் நலனையும், மக்களின் குரலையும், நசுக்க நினைக்கும் பழனிசாமி அரசின் இப்போக்கிற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதோடு, ஜனநாயகம் எல்லா நிலைகளிலும் காக்கப்பட, மக்களின் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தப்படவேண்டும் என்றும், மத்திய அரசின் முன் வைத்த இந்த மக்கள் விரோத வஞ்சக கோரிக்ச்கையை பழனிசாமி அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்