சி.பி.ஐ விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் முதலமைச்சர் உடனடியாக பதவி விலகிட வேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல்

சி.பி.ஐ விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் முதலமைச்சர் உடனடியாக பதவி விலகிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2018-10-12 10:48 GMT
சென்னை,

தமிழக நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4 ஆயிரத்து 800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி தி.மு.க. அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில்  லஞ்ச ஒழிப்பு போலீஸ்  விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் மனுதாரர் முதல்வர் கையில் இருக்கும் லஞ்ச ஒழிப்பு துறை இதனை முறையாக விசாரித்து இருக்காது என கூடுதல் மனுதாக்கல் செய்தனர். இதை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் புகாரை சிபிஐ விசாரிக்க ஐகோர்ட்  உத்தரவிட்டு உள்ளது.

இந்தநிலையில்,  நெடுஞ்சாலை டெண்டர் புகார் பற்றி சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
ஆதாரங்கள் அழிப்புக்கு இடமளித்துவிடாமல் கால தாமதமின்றி சிபிஐ விசாரணையை தொடங்க வேண்டும். உலக வங்கியின் ஊழல் எதிர்ப்பு விதிகளை மீறியது சர்வேத அளவில் தமிழகத்திற்கு தலைகுனிவு. 

சிபிஐ விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் முதல்-அமைச்சர் பழனிசாமி உடனடியாக பதவி விலக வேண்டும், இல்லையேல் ஆளுநர் அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்  என்று திமுக தலைவர் மு.க.மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்