சதயவிழா திருமுறை வீதிஉலாவுக்கு ரூ.10 லட்சத்தில் பெரியகோவில் வடிவில் ரதம் சினிமா கலை வடிவமைப்பாளர் வழங்கினார்

சதயவிழா திருமுறை வீதிஉலாவுக்கு ரூ.10 லட்சத்தில் பெரியகோவில் வடிவிலான ரதத்தை சினிமா கலை வடிவமைப்பாளர் வழங்கினார்.

Update: 2018-10-12 22:20 GMT
தஞ்சாவூர், 

தஞ்சை பெரியகோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரம் அன்று மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு ராஜராஜ சோழனின் 1033-வது ஆண்டு சதயவிழா 19, 20 ஆகிய தேதிகளில் நடக்கிறது. சதயவிழாவின் 2-வது நாள் தஞ்சை பெரியகோவில் போன்று வடிவமைக்கப்பட்ட ரதத்தில் ஓதுவார்கள் அமர்ந்து, திருமுறை பாடல்களை பாடி 4 ராஜ வீதிகளிலும் உலா வருவது வழக்கம்.

புதிய ரதம்

பெரியகோவில் வடிவத்தில் ரதம் அட்டையால் செய்யப்பட்டு இருந்ததால் சில ஆண்டு களாக சிதிலமடைந்த நிலையில் இருந்தது. இதை அறிந்த தஞ்சையை அடுத்த வல்லத்தை சேர்ந்த ராமலிங்கம், தனது சொந்த செலவில் புதிய ரதத்தை செய்து கோவிலுக்கு வழங்க முடிவு செய்தார்.

அதன்படி இந்த ஆண்டு சதயவிழாவுக்காக பைபரில் (கண்ணாடி நாரிழை) 12 அடி உயரம், 18½ அடி நீளம், 7 அடி அகலம் கொண்ட புதிய ரதம் உருவாக்கப்பட்டது. கடந்த 40 நாட்களாக செய்யப்பட்ட இந்த ரதத்தின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். இந்த ரதம் கோவில் நிர்வாகத்திடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

வடிவமைப்பாளர்

இது குறித்து ராமலிங்கம் கூறும்போது, நான் சினிமா கலை இணை வடிவமைப்பாளராக பணிபுரிந்து வருகிறேன். 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றி உள்ளேன். 2010-ம் ஆண்டு தஞ்சையில் நடந்த பெரியகோவில் ஆயிரம் ஆண்டு விழாவின்போது நடந்த கருத்தரங்கிற்கான மேடையை பெரியகோவில் கோபுரத்தை போன்று வடிவமைத்தேன். பெரியகோவில் நவராத்திரி விழாவையொட்டி வைக்கப்பட்டுள்ள கொலு பொம்மைகளை செய்து கொடுத்தேன். தற்போது பெரியகோவில் வடிவில் ரதத்தை உருவாக்கி கொடுத்து இருக்கிறேன் என்றார்.

மேலும் செய்திகள்