மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைவில் அடிக்கல் நாட்டு விழா பிரதமர் கலந்து கொள்வார் என்று மத்திய மந்திரி நட்டா பேட்டி

மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைவில் பிரதமர் அடிக்கல் நாட்டுவார் என மத்திய மந்திரி நட்டா தெரிவித்தார்.

Update: 2018-10-12 22:45 GMT
ஆலந்தூர்,

மத்திய சுகாதார மந்திரி ஜே.பி.நட்டா, டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்த்து இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை, மதுரையில் அமைய இருக்கிறது. அதற்கான வேலைகள் நடந்து வருகிறது.

சுமார் ரூ.1,200 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருக்கிறது. கூடிய விரைவில் மத்திய அமைச்சரவையில் அதற்கான ஒப்புதல் அளிக்கப்படும்.

அடிக்கல் நாட்டு விழா

இதைத் தொடர்ந்து இந்த எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெறும். விழாவில் கலந்து கொண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவார்.

மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரூ.150 கோடி மதிப்பில் கட்டப்பட்டு இருக்கிறது. கூடிய விரைவில் தமிழக முதல்-அமைச்சருடன் அதனை திறந்து வைப்போம். அதற்கான தேதி கலந்து ஆலோசித்த பின் அறிவிக்கப்படும்.

அனைத்து உதவிகளையும் செய்வோம்

எச்.எல்.எல். திட்டம் முடியும் தருவாயில் உள்ளது. அதனை பிரதமர் திறந்து வைக்க அழைப்பு விடுப்போம். மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். மக்களுக்கான நலத்திட்டங்களை விரைவில் முடிக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் மத்திய மந்திரி ஜே.பி.நட்டாவை வரவேற்றனர்.

மேலும் செய்திகள்