தோல்வி பயத்தால் 2 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை டாக்டர் ராமதாஸ் பேச்சு

தோல்வி பயத்தால் 2 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் உள்ளனர் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.

Update: 2018-10-13 21:35 GMT
சென்னை, 

‘உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்குவதில் அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கிறோமா?’ என்ற தலைப்பில் பா.ம.க. சார்பில் கருத்தரங்கம் சென்னை ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவை டி.என்.ராஜரத்தினம் அரங்கத்தில் நேற்று நடந்தது. பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். வடக்கு மண்டல இணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி வரவேற்றார்.

காந்திகிராம நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் க.பழனித்துரை, ஓய்வுபெற்ற அரசு அதிகாரி தியாகராஜன் ஆகியோர் உள்ளாட்சி அமைப்புகளின் முக்கியத்துவம் குறித்து பேசினர்.

கருத்தரங்கில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

உள்ளாட்சி அமைப்புகளின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு விளக்கி கூறும் வகையில் திருச்சி, சேலத்திலும் கருத்தரங்குகள் நடத்த உள்ளோம். இந்த கருத்தரங்குகளில் பங்கேற்று பேசுபவர் கள் பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளிப்பார்கள்.

நாட்டிலேயே தமிழகத்தில் மட்டும் தான் 2 ஆண்டுகள் ஆகியும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்னும் தேர்தல் நடத்தவில்லை. வெற்றி பெறுவோமா? மாட்டோமா? என்ற பயம் ஏற்பட்டதால் தான் தேர்தல் நடத்தப்படவில்லை. உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் பெண்களாக இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

கிராமங்களில் வாழ்வாதாரம் இல்லாததால் மக்கள் நகரங்களுக்கு படையெடுக்கிறார்கள். நகரங்களில் இருந்து மக்கள் கிராமங்களுக்கு படையெடுக்கும் வகையில் பல அற்புதமான திட்டங்களை பா.ம.க. தயாரித்து வைத்திருக்கிறது. இதனை நிழல் பட்ஜெட்டிலும் நாங்கள் வெளியிட்டோம்.

உள்ளாட்சி அமைப்புகள் தான் அனைத்துக்கும் அடிப்படையானது. எனவே மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரத்தை வழங்கி, மத்திய-மாநில அரசுகள் மேற்பார்வை செய்யவேண்டும். இவ்வாறு செய்தால் தான் காந்தியின் கனவு நினைவாகும். மாற்றம் நிகழவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

துணை பொதுச்செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், வி.ஜே.பாண்டியன், தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் வே.வடிவேல் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சென்னை மாவட்ட அமைப்பு செயலாளர் மு.ஜெயராமன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்