மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதியது - என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புஞ்சை புளியம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் பலியானார்கள்.

Update: 2018-11-06 23:00 GMT
புஞ்சை புளியம்பட்டி,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்குபேட்டை பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார்(வயது18). இவர் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர் சித்திக்(18). இவர் கோவை பீளமேடு பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்தநிலையில் தீபாவளியையொட்டி நேற்று வெளியான சர்கார் படத்தை பார்ப்பதற்காக அதிகாலை 5 மணிக்கு இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் புளியம்பட்டி சென்றனர்.

பின்னர் அங்குள்ள தியேட்டரில் சர்கார் படம் பார்த்துவிட்டு வீடு திரும்பினர். நல்லூர் மாதேஸ்வரன் கோவில் அருகே சென்றபோது, எதிரே வந்த சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட இருவரும் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த புஞ்சை புளியம்பட்டி போலீசார் பலியான இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்