சர்கார் படத்திற்கு எதிராக மதுரை, கோவையில் அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் ; காட்சிகள் ரத்து

சர்கார் திரைப்படத்திற்கு எதிராக மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தியேட்டர்கள் முன்பு அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2018-11-08 11:22 GMT
சென்னை,

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளையும் மீறி தீபாவளியன்று வெளியானது.

முழுக்க முழுக்க தமிழக அரசியலை விமர்சனம் செய்வது போன்ற காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தனிமனித ஓட்டுரிமையின் அவசியத்தையும், பல்வேறு துறைகளின் அதிகாரிகள் செயல்பாடுகள் குறித்தும், அரசின் இலவச திட்டங்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளன. தமிழக அரசியல் குறித்து சர்ச்சைக்குரிய வசனங்கள் இருப்பதாக கூறி அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள்  கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இந்தப் படத்தின் ஒரு காட்சியில் தமிழக அரசின் இலவச மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகளை அப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் துணை நடிகர்கள் தூக்கி எறிவது போன்ற காட்சி இருப்பதாகவும், அப்படத்தின் வில்லி பாத்திரத்திற்கு ஜெயலலிதாவின் இயற்பெயரை சூட்டியதாகவும் அதிமுகவினர் கடந்த 2 நாளாக கொந்தளிப்பில் உள்ளனர்.

சர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வலியுறுத்தி, மதுரை அண்ணா நகரில் உள்ள சினிப்ரியா திரையரங்ககை முற்றுகையிட்டு அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் இன்று போராட்டம்
நடைபெற்றது.

போராட்டத்தின் போது  ஏழை மக்களுக்கு தமிழக அரசு வழங்கிய இலவச திட்டப் பொருட்களை தூக்கி எறிந்து வன்முறையைத் தூண்டியுள்ளனர். வியாபார நோக்கில் ஆளும் கட்சியையும், ஜெயலலிதாவையும் இழிவுபடுத்த வேண்டும் என்ற திட்டத்துடன் அவர்கள் படத்தை எடுத்துள்ளனர். இந்தப் படத்தின் காட்சிகளை மாற்றியமைக்கும் வரை தியேட்டர் உரிமையாளர்கள் இந்தப் படத்தை திரையிடக்கூடாது. மீறி இந்தப் படத்தை வெளியிட்டால் மதுரையில் எந்த தியேட்டரிலும் ஓட விடமாட்டோம். அதுவரை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இந்தப் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்கள் முன் போராட்டம் தொடரும்  என கூறினார்.

இதுபோல் சர்கார் திரைப்படத்தைக் கண்டித்து கோவையில் அதிமுக வினர் போராட்டம்நடத்தினர் .  விஜய் படத்துடன் கூடிய பேனர்கள் கிழித்து எறியப்பட்டன. கோவையில் உள்ள சாந்தி திரையரங்கம் முன்பு அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மதுரை அண்ணாநகரில் சினிபிரியா தியேட்டர் முன் அதிமுகவினர் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து சினிபிரியா, மினிபிரியா, சுகப்பிரியா திரையரங்குகளில் சர்கார் படத்தின்  பிற்பகல் 2.30 மணி காட்சி ரத்து செய்யப்பட்டது.

மதுரையில் அதிமுகவினர் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து திருச்சியில் சர்கார் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள 7 திரையரங்குகளுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்