மேகதாது அணை கட்ட அனுமதி; பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் பழனிசாமி கடிதம்

மேகதாது அணை கட்ட வழங்கிய அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2018-11-27 10:10 GMT
சென்னை,

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்தது.  இதனை அடுத்து மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கையை தயார் செய்தது.  இதற்காக மத்திய சுற்று சூழல் அமைச்சகத்திடம் அனுமதி கோரியிருந்தது.  இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய சுற்று சூழல் அமைச்சகத்தின் அனுமதி கர்நாடகாவுக்கு வழங்கப்பட்டது.

இந்த வரைவு திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கிய நிலையில், இறுதி அறிக்கைக்கு கர்நாடகா ஒப்புதல் பெறுவதை தடுப்பதற்காக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்ல முடிவு செய்தது.

அதன்படி, மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், மேகதாதுவில் அணை கட்ட வழங்கப்பட்ட பூர்வாங்க அனுமதியை எதிர்த்து பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட மத்திய நீர்வள துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.  இது தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த அனுமதியை திரும்ப பெற அந்த அமைச்சகத்திற்கு பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் என முதல் அமைச்சர் கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.

காவிரி நீரை நம்பியுள்ள லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் மேகதாதுவில் அணை கட்டினால் பாதிக்கும் என்றும் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்