கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்துக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்துக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என்று தமிழக அரசை டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2018-12-11 22:27 GMT

சென்னை, 

பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத்திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 21 கோரிக்கைகளை முன்வைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் தமிழ்நாடு முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

கிராம நிர்வாக அலுவலர்களின் போராட்டத்தால் வருவாய்த்துறை பணிகள் முடங்கியிருக்கின்றன. நவம்பர் 28–ந் தேதியில் இருந்தே கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களின் பணிகளை படிப்படியாக குறைத்து கொண்டனர். அதுமட்டுமின்றி, இப்போதும் அடுத்தடுத்து 3 கட்ட போராட்டங்களை நடத்த உள்ளனர். அவர்களின் போராட்டங்களால் மாணவர்கள் முதல் விவசாயிகள் வரை அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ்களை பெறுதல், நில அளவீடுகள், விவசாயிகள் தீர்வை செலுத்துதல் உள்ளிட்ட அனைத்து வகையான பணிகளும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதேநிலை நீடித்தல் அரசு எந்திரத்தின் அடித்தட்டு நிர்வாகம் முற்றிலுமாக செயலிழக்கும் ஆபத்து உள்ளது. இதை தடுத்து நிறுத்த வேண்டியது தமிழக அரசின் கடமையும், பொறுப்பும் ஆகும்.

எனவே, வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம நிர்வாக அலுவலர்களை தமிழக அரசு அழைத்து பேச வேண்டும். அவர்களின் கோரிக்கைகளில் சாத்தியமானவற்றை நிறைவேற்றி கிராம நிர்வாக அலுவலர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்