கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பஸ்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காதது ஏன்? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் டவுண் பஸ்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2018-12-11 22:52 GMT

சென்னை, 

சென்னை ஐகோர்ட்டில், கலியபெருமாள் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில், கடலூர், அரியலூர் மாவட்டங்களில் தனியார் டவுண் பஸ்களில் கட்டண விவர பட்டியலை ஓட்டுவது இல்லை. அந்த தனியார் பஸ்களின் கண்டக்டர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தைவிட அதிகம் வசூலிக்கின்றனர்.

எனவே, கட்டண விவர பட்டியலை பஸ்களில் ஓட்டுவதை கட்டாயமாக்கவேண்டும் என்று கூறி இருந்தார். மேலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று கூறி இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘கடலூர், மரக்காணம், விருதாச்சலம் ஆகிய பகுதிகளில் ஓடும் தனியார் பஸ்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. விதிமீறலில் ஈடுபட்ட பஸ்களின் உரிமையாளர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், போக்குவரத்துத்துறை அதிகாரிகளின் செயல்பாடுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். விதிமீறலில் ஈடுபட்டுள்ளார்கள் என்று தெரிந்தும் ஏன் அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது?. கடந்த 3 ஆண்டுகளில் விதி மீறியதாக எந்த தனியார் பஸ்களின் உரிமத்தையும் ஏன் ரத்து செய்யவில்லை? அந்த பஸ்களின் உரிமையாளர்களுடன், போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கை கோர்த்து, கூட்டுச்சேர்ந்து செயல்படுகின்றனரா?‘ என்று சரமாரியாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பின்னர், ‘‘இந்த வழக்கை 2019–ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு தள்ளிவைக்கிறோம். அதற்குள், தனியார் பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளிடம் கூடுதல் கட்டணத்தை வசூலிப்பதை தடுக்க எந்தவிதமாக நடவடிக்கையை எடுக்கலாம்?. அவ்வாறு எத்தனை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?. இதுவரை எத்தனை தனியார் பஸ்களில் விதிமீறல் நடந்துள்ளன? என்பது உள்ளிட்ட விவரங்களை கொண்ட அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும்’’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்