ஜெயலலிதாவின் நினைவிடம் மார்ச் மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும்; தமிழக அரசு

ஜெயலலிதாவின் நினைவிடம் மார்ச் மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும் என தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Update: 2018-12-19 12:41 GMT
சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சரான ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் நினைவு மண்டபம் கட்ட அனுமதியளிக்கப்பட்டு, கடந்த ஜனவரி 10-ந் தேதி ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த மே 7-ந் தேதி இந்த நினைவிடத்திற்காக அடிக்கல்லும் நாட்டப்பட்டு உள்ளது.  பீனிக்ஸ் பறவை வடிவில் மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மெரீனாவில் நினைவிடம் அமைக்க தடை விதிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது.  இதுபற்றிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன் தமிழக அரசு தெரிவித்துள்ள தகவலில், சென்னை மெரீனாவில், மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் அமைப்பதற்கு அதிகார வரம்புகளுக்குட்பட்டே முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.  இந்த நினைவிடம் சட்ட விதிகளுக்குட்பட்டே கட்டப்படுகிறது என தெரிவித்துள்ளது.

ஜெயலலிதாவின் நினைவிடம் மார்ச் மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்