சர்கார் படவிவகாரம்; அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு மிரட்டல் விடுத்த விஜய் ரசிகருக்கு முன்ஜாமீன்

சர்கார் படவிவகாரத்தில் அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு மிரட்டல் விடுத்த விஜய் ரசிகருக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.

Update: 2018-12-22 12:27 GMT
சென்னை,

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த ‘சர்கார்’ படம் தீபாவளி அன்று வெளியானது.  இந்த படத்தில் அரசு வழங்கும் இலவச பொருட்களுக்கு எதிராக காட்சிகள் இடம்பெற்று உள்ளதாக கூறி அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை கண்டித்து ‘சர்கார்’ படம் ஓடும் தியேட்டர்கள் முன்பு அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர்.

அப்போது தியேட்டர்களுக்கு முன்பு வைக்கப்பட்டு இருந்த நடிகர் விஜய் பட பேனர்கள் கிழித்து எறியப்பட்டன. சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அ.தி.மு.க.வினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் அந்த காட்சிகளை நீக்க படக்குழு ஒப்புக்கொண்டது. அதன்படி ஒரு சில காட்சிகள் நீக்கியபின்னர் படம் திரையிடப்பட்டது.  இதனால் இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.

சர்கார் படத்தின் சில காட்சிகளை நீக்குமாறு அ.தி.மு.க. போராட்டம் நடத்திய போது பட்டாபிராமை சேர்ந்த லிங்கதுரை என்ற விஜய் ரசிகர் வாட்ஸ்அப் வழியே அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு மிரட்டல் விடுத்துள்ளார் என புகார் கூறப்பட்டது.

இதுபற்றிய வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் லிங்கதுரை மனு செய்துள்ளார்.  இதன்மீது இன்று நடந்த விசாரணையில் அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டது.

மேலும் செய்திகள்