செந்தில் பாலாஜி ஒரு பச்சோந்தி ஒரு அரசியல் வியாபாரி -முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

செந்தில் பாலாஜி ஒரு பச்சோந்தி, அரசியல் வியாபாரி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார்.

Update: 2018-12-27 08:45 GMT
சென்னை

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு மாற்றுக்கட்சியினர் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்,  இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில்  கட்சியில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சரும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான  எடப்பாடி பழனிசாமி, திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்தார்.

நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

அண்ணன், தம்பிக்குள் பிரச்சினை ஏற்பட்டது போல் நமக்குள் ஏற்பட்டது, ஆனால் தற்போது இணைந்துவிட்டோம். அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகளுக்கு சென்றவர்கள் மீண்டும் திரும்பி வந்திருப்பது, அதிமுக என்ற குடும்பத்தின் பாசப் பிணைப்பை காட்டுகிறது. தொண்டர்களின் இயக்கமான அதிமுகவிற்கு வந்தவர்களுக்கு என்றும் மரியாதை உண்டு. 40 ஆண்டுகளுக்கு மேலாக கட்சியில் விசுவாசத்துடன் இருந்ததால்தான் தங்களுக்கு உரிய விலாசம் கிடைத்துள்ளது.

செந்தில் பாலாஜி கொள்கை பிடிப்பு இல்லாதவர், நன்றி மறந்து செயல்படுகிறார். அமமுகவில் இருந்து திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி ஒரு  அரசியல் வியாபாரி. பச்சோந்தி கூட சில காலம் கழித்துதான் நிறம் மாறும், ஆனால், செந்தில் பாலாஜி 5 கட்சிகள் மாறி எந்த கட்சியில் இருந்து வந்தாரோ அங்கேயே சென்றுவிட்டார் என கூறினார்.

நிகழ்ச்சியில் துணை-முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்