பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதி தொடக்கம்; தமிழக அரசு அறிவிப்பு

பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதியில் இருந்து தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Update: 2018-12-29 12:18 GMT
சென்னை,

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை அனைத்து தரப்பு மக்களாலும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.  விளைந்த கதிரில் இருந்து எடுக்கப்பட்ட புது அரிசியை, மஞ்சள் கட்டிய பொங்கல் பானையில் இட்டு வெல்லம் கலந்து பொங்கலிட்டு தைத்திருநாளன்று மக்கள் பொங்கலை கொண்டாடுகின்றனர்.  இந்த பொங்கல் தினம் போகி பண்டிகையில் தொடங்கி, தைப்பொங்கல், திருவள்ளுவர் நாள், உழவர் திருநாள் என அடுத்தடுத்து கொண்டாடப்படும்.

இந்த நாளுக்காக பல்வேறு ஊர்களிலும் பணியாற்றி வரும், படித்து வரும் அனைத்து தரப்பினரும் தங்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.  அவர்களின் வசதிக்காக தமிழக அரசானது சிறப்பு பேருந்து வசதிகளை செய்துள்ளது.

இதேபோன்று சென்னையில் இருந்து பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு மையங்கள் ஜனவரி 9ந்தேதியில் இருந்து தொடங்கி ஜனவரி 14ந்தேதி வரை செயல்படும்.  பயணிகளின் வசதிக்காக 30 சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கப்படும்.

சென்னையில் இருந்து ஜனவரி 11ந்தேதியில் இருந்து ஜனவரி 14ந்தேதி வரை 14,263 பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

இதற்காக கோயம்பேடு, தாம்பரம் சானடோரியம் மற்றும் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், மாதவரம், பூந்தமல்லி, கே.கே. நகர் ஆகிய பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

பொங்கல் முடிந்து பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு ஜனவரி 17ந்தேதி முதல் ஜனவரி 20ந்தேதி வரை 3,776 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

பொங்கல் முடிந்து பிற முக்கிய ஊர்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 7,841 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆந்திரா மார்க்கம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

கே.கே.நகர் பேருந்து நிலையத்திலிருந்து ஈசிஆர் மார்க்கமாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

தாம்பரம் சானிடோரியத்திலிருந்து விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சை செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்திலிருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

பூவிருந்தவல்லியிலிருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு மற்றும் ஓசூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

பிற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் வழக்கம்போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருக்கைகள் பூர்த்தியான பேருந்துகள் தாம்பரம், பெருங்களத்தூர் செல்லாமல் மதுரவாயல், பூவிருந்தவல்லி, நசரத்பேட்டை, வெளிசுற்று சாலை வழியாக வண்டலூர் செல்லும்.

தாம்பரம், பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து முன்பதிவு செய்த பயணிகள், ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தத்தில் இருந்து பயணம் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்