கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம்: பெண் மற்றும் கணவருக்கு அரசு வேலை வழங்குவதற்கு முயற்சி - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தியதால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் பெண் மற்றும் கணவருக்கு அரசு வேலை வழங்குவதற்கு முயற்சிகள் நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-30 10:14 GMT
சென்னை,

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவரின் மனைவி 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த அவருக்கு, சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தம் செலுத்தப்பட்டதால், அந்த கர்ப்பிணி எச்.ஐ.வி. தொற்றுக்கு ஆளாகி இருப்பது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாதிக்கப்பட்ட அந்த கர்ப்பிணி தற்போது மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனி வார்டில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஹெச்ஐவி ரத்தம் செலுத்தியதால் பாதிக்கப்பட்டு, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணி பெண்ணை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சந்தித்து ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கினார். அதனைதொடர்ந்து  நிவாரண உதவிகள் மற்றும் அரசு வேலை வாங்கி தருவதாக பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதி அளித்தார்.

பின்னர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாதிக்கப்பட்ட பெண்ணின் சொந்த ஊரிலேயே அவருக்கு வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது கணவருக்கு அரசு வேலை வழங்குவதற்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்