‘பதவியில் இருந்து ஓய்வுபெற்றாலும் பணியில் எனக்கு ஓய்வே இல்லை’ ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.விமலா பேச்சு

என்னுடைய பதவிக்குத்தான் ஓய்வு வழங்கப்பட்டுள்ளதே தவிர, எனது சட்டம் சார்ந்த பணிக்கு ஓய்வு இல்லை என்று ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.விமலா கூறினார்.

Update: 2019-01-10 22:15 GMT
சென்னை, 

சென்னை ஐகோர்ட்டில் மூத்த நீதிபதியாக பணியாற்றிவந்த எஸ்.விமலா நேற்று பணியில் இருந்து ஓய்வுபெற்றார். இதையடுத்து அவருக்கு ஐகோர்ட்டில் வழியனுப்பு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி வி.கே.தஹிலரமானி, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, எஸ்.மணிக்குமார், எம்.வேணுகோபால், எம்.சத்தியநாராயணன், சி.டி.செல்வம், என்.கிருபாகரன், எம்.எம்.சுந்தரேஷ், டி.எஸ்.சிவஞானம், எம்.துரைசாமி உள்பட அனைத்து ஐகோர்ட்டு நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன், நர்மதா சம்பத், எஸ்.ஆர்.ராஜகோபால், அரசு பிளடர் ஜெயபிரகாஷ் நாராயணன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

நீதிபதி எஸ்.விமலாவை வாழ்த்தி கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபால் பேசும்போது, ‘இவர் எழுதிய ‘வழக்கில் வெற்றிபெற்றது, வாழ்க்கையில் வெற்றிபெற்றதாக அர்த்தமா?’ என்ற ஆங்கில சட்டப்புத்தகம் குடும்பநல வழக்குகளை அலசி ஆராய்ந்துள்ளது. இவரது கணவர் வேல்முருகன், மகன் விவேக், மருமகள் வி.சாரதாதேவி ஆகியோரும் வக்கீல்கள் தான். மகன் விவேக் பிரபல திரைப்பட பாடலாசிரியர்’ என்றார்.

நீதிபதி எஸ்.விமலா நன்றி தெரிவித்து பேசியதாவது:-

ஐகோர்ட்டில் ஒரு நீதிபதியாக எனது பணியை சிறப்பாக செய்துள்ளேன் என்ற நம்பிக்கை உள்ளது. நடைமுறை சிக்கல்களால் சில நேரங்களில் நீதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டிருக்கலாமேயன்றி, எக்காலத்திலும் நீதி வழங்குவதில் தாமதம் செய்தது இல்லை. சில நேரங்களில் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக அந்த எல்லையைத் தாண்டியும் தீர்ப்பளித்துள்ளேன்.

நீதியை தேடி நீதிமன்றங்களுக்கு வரும் பொதுமக்களின் நிலைமையை உணர்ந்து அதற்கேற்ப நீதிமன்றங்கள் செயல்பட வேண்டும். ஐகோர்ட்டு நீதிபதி என்று நான் வகித்துவந்த பதவிக்குத்தான் ஓய்வு வழங்கப்பட்டுள்ளதே தவிர, எனது சட்டம் சார்ந்த பணிக்கு ஓய்வு இல்லை. எனது பணி வழக்கம்போல தொடரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்