நீர், நில மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த அமெரிக்க பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது

தமிழகத்தில் நீர், நில மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த அமெரிக்க பல்கலைக்கழகத்துடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

Update: 2019-01-11 23:15 GMT
சென்னை,

நீர் மேலாண்மையில் புதிய நடைமுறைகளை கொண்டு வருவதற்கும், வேளாண்மை மற்றும் தோட்டக்கலையில் துல்லியமான உயர் தொழில்நுட்பத்தை செயல்படுத்தவும், வேளாண்மை வணிகத்தை உயர்த்தவும், கால்நடை மற்றும் மீன்வளம் போன்ற பிற இனங்களில் புதுமைகளை புகுத்தவும், உலகளவில் தற்போது செயல்பாட்டில் உள்ள மிகச்சிறந்த நடைமுறைகளை பயன்படுத்திக்கொள்ள தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது.

வள மேலாண்மை, வாழ்க்கை அறிவியல் மற்றும் வேளாண்மை அறிவியலில் உலகின் 2 சிறந்த பல்கலைக்கழங்களில் ஒன்றாக அமெரிக்க நாட்டின், இட்டாச்சா நகரில் அமைந்துள்ள கார்னெல் பல்கலைக்கழகம் விளங்கி வருகிறது.

ஒப்பந்தம்

கார்னெல் பல்கலைக்கழகத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் பன்னாட்டு செயல்முறை, வேளாண் மற்றும் அறிவியல் ஆய்வு கல்லூரியானது உணவு, எரிசக்தி, சுற்றுச்சூழல், வாழ்க்கை அறிவியல், சமூக மற்றும் பொருளாதார நலன் போன்றவற்றில் பல ஆய்வுகளை மேற்கொண்டு சிறந்து விளங்குகிறது.

உலக வங்கி நிதி உதவியுடன் தமிழக நீர்வள, நிலவள திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த, நீர் மற்றும் நில மேலாண்மை திட்டத்தை தமிழகத்தில் சிறந்த முறையில் செயல்படுத்திட, தமிழ்நாடு நீர்வள, நிலவள திட்டத்துக்கும், கார்னெல் பல்கலைக்கழகத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேற்று கையொப்பம் இடப்பட்டது.

வேளாண்மை புரட்சி

இந்த ஒப்பந்தத்தில், தமிழ்நாடு நீர்வள, நிலவள திட்டத்தின் இயக்குனர் விபு நய்யர், கார்னெல் பல்கலைக்கழகத்தின் அங்கமாக செயல்படும் பன்னாட்டு செயல்முறை, வேளாண் மற்றும் அறிவியல் ஆய்வு கல்லூரியின் செயல் முதல்வர் ஜான் பெப்பெர் ஆகியோர் கையெழுத்திட்டனர். இதன் மூலம் கார்னெல் பல்கலைக்கழகம் தமிழ்நாடு நீர்வள, நிலவள திட்ட அமைப்புடன் இணக்கத்துடன் செயல்பட்டு, வேளாண்மை அறிவுத்திறனை மேம்படுத்துதல், கால்நடை மற்றும் மீன்வளத்துறை ஆகியவற்றில் புதிய உத்திகளை புகுத்துதல், தொழில்நுட்ப பரிமாற்றம் ஆகியவை ஏற்படுத்தப்படுவதோடு, வேளாண்மை புரட்சியை ஏற்படுத்த வழிவகுக்கும்.

நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், நீர்வள ஆதாரத்துறை முதன்மை தலைமை பொறியாளர் மற்றும் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் (பொது) எம்.பக்தவத்சலம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பாலாற்றின் குறுக்கே ரூ.10 கோடியில் பாலம்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் காஞ்சீபுரம் மாவட்டம் எடயாத்தூர் ஊராட்சியில் பாலாற்றின் குறுக்கே ரூ.9 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தினை எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். மேலும் சென்னை மதுரவாயலில் ரூ.6 கோடியே 99 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தையும், அரியலூர் ஊராட்சி ஒன்றியம் கல்லக்குடி வைப்பம் சாலையில் ரூ.96 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறுபாலம் ஆகியவற்றையும் அவர் திறந்து வைத்தார்.

50 ஜீப்புகள்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மாவட்ட திட்ட இயக்குநர்களுக்கு 13 ஜீப்புகள், செயற்பொறியாளர்களுக்கு 2 ஜீப்புகள், உதவி இயக்குநர், உதவி திட்ட அலுவலர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மற்றும் உதவி செயற்பொறியாளர்களுக்கு 32 ஜீப்புகள், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு 3 ஜீப்புகள் என மொத்தம் ரூ.3 கோடியே 20 லட்சத்து 62 ஆயிரத்து 488 மதிப்பீட்டிலான 50 ஜீப்புகளை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக வழங்கும் அடையாளமாக, 7 ஓட்டுனர்களுக்கு ஜீப்புகளுக்கான சாவிகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

கபாலீசுவரர் கோவில் திருமண மண்டபம்

சென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலுக்கு சொந்தமான ராஜா அண்ணாமலைபுரத்தில் தரைத்தளத்தில் குளிர்சாதன வசதியுடன் கூடிய 475 இருக்கைகள் கொண்ட உணவு அருந்தும் இடம், முதல் தளத்தில் ஆயிரம் இருக்கைகள் கொண்ட திருமண நிகழ்ச்சிக்கூடம், 80 இருக்கைகள் கொண்ட முக்கிய பிரமுகர்கள் உணவு அருந்தும் இடம், 14 தங்கும் அறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள அதிநவீன திருமண மண்டபம்;

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டம் அருணாச்சலேசுவரர் கோவிலின் உபகோவிலான சோமாசிபாடி பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் சுமார் 50 சேவார்த்திகள் உணவு உட்கொள்ளும் வசதியுடன் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடம் என மொத்தம் 17 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான திருமண மண்டபம் மற்றும் அன்னதானக் கூடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

மேலும் செய்திகள்