சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: நளினி சிதம்பரத்துக்கு இடைக்கால ஜாமீன் ஐகோர்ட்டு உத்தரவு

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் நளினி சிதம்பரத்துக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2019-01-12 21:32 GMT
சென்னை,

கொல்கத்தாவில் உள்ள சாரதா நிதி நிறுவனம், பொதுமக்களிடம் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடாக பெற்று மோசடி செய்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை கொல்கத்தா சிறப்பு கோர்ட்டில், சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ளது. அதில், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மனைவியும், சென்னை ஐகோர்ட்டின் மூத்த வக்கீல் நளினி சிதம்பரத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு நளினி சிதம்பரம் மனு செய்தார்.

இந்த மனுவை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்தார். அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ‘சாரதா நிதி நிறுவனத்திற்கு சட்ட ஆலோசனை வழங்கியதற்காக ரூ.1 கோடியே 40 லட்சத்தை நளினி சிதம்பரம் பெற்றுள்ளதை குற்றமாக கருதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக அவரை கைது செய்யக்கூடும் என்பதால் முன்ஜாமீன் வழங்க வேண்டும். அதேபோல, சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகளும் கைது நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்பதால் அதற்கும் முன்ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று வாதிட்டார்.

இதையடுத்து, ‘நளினி சிதம்பரத்துக்கு 4 வாரகாலத்துக்கு இடைக்கால ஜாமீன் வழங்குகிறேன். 2 வாரத்திற்குள் எழும்பூர் கோர்ட்டில் நளினி சிதம்பரம் சரணடைந்து, ஜாமீன் உத்தரவாதத்தை வழங்கவேண்டும். அதன்பின்னர், முன்ஜாமீனுக்காக கொல்கத்தா கோர்ட்டை அணுக வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்