‘கோடநாடு விவகாரத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டை பரப்புகிறார்கள்’ அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி

கோடநாடு விவகாரத்தில் எங்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டை பரப்பி வருகிறார்கள் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

Update: 2019-01-13 21:56 GMT
திண்டிவனம்,

திண்டிவனத்தில் நேற்று காலை நடந்த அரசு விழாவில் கலந்துகொள்ள வந்திருந்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை தொடர்பாக தெகல்கா நிறுவன முன்னாள் பத்திரிகை ஆசிரியர் சித்தரிக்கப்பட்ட ஆவணப் படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த சம்பவம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவர் மூலமாக தெகல்கா நிறுவனம் சித்தரிக்கப்பட்ட ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது. தெகல்கா நிறுவனம் குறித்து நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும். புகழ்பெற்றவர்கள் மீதும் பெரிய பதவிகளில் இருப்பவர் கள் மீதும் பரபரப்பாக தவறான செய்திகளை வெளியிடுவார் கள். எந்த செய்தி மீதும் இதுவரை மேல் நடவடிக்கை இல்லை.

இப்போது சந்தேகங்களை எழுப்புபவர்கள் 2 ஆண்டு காலமாக எதையும் மக்களுக்கும், நீதிமன்றத்துக்கும் தெரிவிக்காமல் டெல்லியில் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். அதில் உண்மை இல்லை. முன்னாள் ஆசிரியருக்கு சந்தேகம் ஏற்பட்டிருந்தால், கோடநாடு கொலையில் தொடர்புடைய அவரது மனைவி, மகன் அகால மரணத்திற்கு அப்போதே காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருக்கலாம். இது கட்டுக்கதை. கற்பனைக்கதை.

இந்த ஆட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தி விடலாம் என்று இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச் சாட்டை பரப்பி வருகிறார்கள். எங்களுக்கு மடியில் கனமில்லை. வழியில் பயமில்லை.

ஜெயலலிதா ஆட்சி மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய் சந்தேகங்களை எழுப்பக்கூடாது. எந்த காலத்திலும் கட்சி தொண்டர்களிடம் எதையும் எதிர்பார்க்காத ஒரே தலைவர் ஜெயலலிதா தான்.

களங்கம் ஏற்படுத்தும் வகையில் கெட்ட நோக்கத்தில் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவது எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாடிக்கையாகிவிட்டது. இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

மேலும் செய்திகள்