கவர்னர் மாளிகையில் பொங்கல் விழா : கலைநிகழ்ச்சிகளுடன் நடந்தது

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா கோலாகலமாக நடந்தது.

Update: 2019-01-16 23:53 GMT
சென்னை, 

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பொங்கல் விழா நடந்தது. இதையொட்டி கரும்பு, மஞ்சள் குலை, காய்கறி, பழங்கள் போன்றவற்றை சூரிய பகவானுக்கு படையலிட்டு மண் பானையில் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது. 

விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழக சபாநாயகர் தனபால், அமைச்சர் பாண்டியராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கவர்னரின் கூடுதல் தலைமை செயலாளர் ராஜகோபால் அனைவரையும் வரவேற்றார்.

விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசும்போது கூறியதாவது:-

பொங்கல் விழா தமிழர்களுக்கான விழா. நாடு முழுவதும் இந்த நாள் மகர சங்கராந்தியாக கொண்டாடப்படுகிறது. சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாகவும், அறுவடை திருநாளாகவும் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சர்க்கரை பொங்கல் வைத்து படையலிட்டு வழிபடுவது தனி சிறப்புக்குரியது.

சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை போன்றவற்றை உள்ளடக்கியதாக பொங்கல் விழா உள்ளது. ஏழை, பணக்காரன் என்ற பாரபட்சம் இல்லாமல் பொங்கல் தினத்தன்று அனைவரது வீடுகளிலும் பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு படைக்கப்படுகிறது.

விவசாயத்துக்கு உறுதுணையாக இருந்து வரும் மாடுகளுக்கும், காளைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. சாதி, சமயம், மதம் எதுவும் பார்க்காமல் பொங்கல் விழா கொண்டாடப்படுவது பெருமை அளிக்கிறது. இந்த பொங்கல் விழா அனைவரது குடும்பத்திலும் மகிழ்ச்சியையும், அமைதியையும் தர வேண்டும்.

இவ்வாறு கவர்னர் கூறினார்.

விழாவின் போது, தமிழர்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பின்னணி பாடகி சுதா ரகுநாதன், நாதஸ்வர வித்வான் தேசூர் செல்வரத்தினம், நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், வயலின் வித்வான் விஜி கிருஷ்ணன், பரதநாட்டிய கலைஞர் சித்ரா விஸ்வேஸ்வரன் மற்றும் பல்வேறு கலைஞர்கள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

அதேபோன்று விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு தென்னிந்திய உணவு வகைகள் பரிமாறப்பட்டன.

மேலும் செய்திகள்