போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை முதலமைச்சர் உடனடியாக அழைத்து பேசி சுமூக தீர்வு காண வேண்டும் - மு.க. ஸ்டாலின்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை முதலமைச்சர் உடனடியாக அழைத்து பேசி சுமூக தீர்வு காண வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டு கொண்டு உள்ளார்.

Update: 2019-01-28 11:45 GMT
சென்னை

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் போராட்டம் ஒவ்வொரு நாளும் மிகவும் தீவிரமடைந்து வரும் நிலையில் மாணவர்களின் நலன் பற்றியோ, அறவழியில் போராடுவோரின் கோரிக்கைகள் பற்றியோ பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி ஆகியோர் கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு அமைதி காப்பதும், அமைச்சர்  ஜெயக்குமார் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை கொச்சைப்படுத்தும் வகையில் முழுப்பக்க விளம்பரங்கள் கொடுத்து போராட்ட உணர்வை மேலும் தூண்டிவிடுவதும் மிகுந்த  வேதனை அளிக்கிறது. அமைச்சர்களின் பொறுப்பற்ற செயல் மட்டுமின்றி, முதலமைச்சரின் பாராமுகம் இன்றைக்கு இந்த போராட்டத்தை இவ்வளவு தீவிரமாக்கியிருக்கிறது என்பது மிகவும் கவலைக்குரியது.

அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் முறையான முன்னறிவிப்புகள் கொடுத்து பல மாதங்களாக போராடி வந்தாலும், அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல்  அவர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயம் பற்றியும் அக்கறை செலுத்தி தீர்வு காண முயற்சிக்காமல் முதலமைச்சர் வெறும் அடக்குமுறை நடவடிக்கைகளை மட்டும் கட்டவிழ்த்து விட்டு பிரச்னைக்கு தீர்வு கண்டு விடலாம் என்று நினைப்பது கொடூரமான மனிதநேயமற்ற மனப்பான்மையாகும்.  பரஸ்பர பேச்சுவார்த்தை மூலம் ஏற்படும் தீர்வு தான் இப்பிரச்னைக்கு  நிரந்தரத்தீர்வாக அமையும் என்ற அடிப்படை உண்மையைக்கூட புரிந்து கொள்ளாமல் காவல்துறையை கட்டவிழ்த்து விட்டிருப்பது கண்டனத்திற்குரியது. போராடுபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மாணவர்களுக்கு கல்வி வழங்குவதற்கான சூழ்நிலையை உருவாக்குவதுதான் இப்போது முக்கியமே தவிர அ.தி.மு.க. அரசு மற்றும் அமைச்சர்களின் கவுரவம் அல்ல என்பதை மனதில் நிறுத்தி இப்பிரச்னைக்கு உடனே தீர்வு காண வேண்டும்.

ஆகவே ஜாக்டோ-ஜியோ அமைப்பினை சேர்ந்தவர்களை உடனடியாக அழைத்துப்பேசி, போராட்டத்தினை சுமூகமான ஒரு முடிவிற்கு கொண்டு வருவதற்கு தேவையான  அனைத்து நடவடிக்கைகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இனியும் கால தாமதம் இன்றி எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

அதே நேரத்தில் "திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகள் அத்தனையும் முறையான பேச்சுவார்த்தை மூலம்  நிறைவேற்றப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும், தற்போது ஊழல் அ.தி.மு.க. அரசு எடுத்து வரும் சட்டவிரோத, அடக்குமுறை நடவடிக்கைகள் எல்லாம் நிச்சயம் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்து கொள்கிறேன்" என அதில் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்