பிறந்தநாளை முன்னிட்டு ஜெயலலிதா பேனர் வைக்க அனுமதி கேட்கும் மனுக்களுக்கு பதில் அளிக்க வேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு பேனர்கள் வைக்க அனுமதி கேட்கும் மனுக்களுக்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-02-13 20:00 GMT

சென்னை, 

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு பேனர்கள் வைக்க அனுமதி கேட்கும் மனுக்களுக்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அவமதிப்பு வழக்கு

தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக பேனர்கள் வைப்பது குறித்து தமிழக அரசுக்கு எதிராக டிராபிக் ராமசாமி கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் விசாரித்து, ‘‘பேனர்கள் வைப்பதற்கான விதிகளையும், இந்த ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள பல்வேறு உத்தரவுகளையும் தீவிரமாக அமல்படுத்துவோம். விதிமீறல் எதுவும் இனி இருக்காது என்று தமிழக அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் உறுதியான உத்தரவாதம் தரும் வரை, அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் தமிழகம் முழுவதும் எந்த ஒரு பேனர்களையும் வைக்க மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தடை விதிக்கப்படுகிறது’ என்ற அதிரடி உத்தரவை கடந்த டிசம்பர் 19–ந் தேதி பிறப்பித்தனர்.

ஜெயலலிதா பிறந்தநாள்

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.நிர்மல்குமார் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘மறைந்த ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 24–ந் தேதி பேனர்கள் வைக்க அனுமதிக்க வேண்டும். ஏற்கனவே, ஐகோர்ட்டு தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால், எங்களது கோரிக்கை மனுக்களை கூட அரசு அதிகாரிகள் வாங்க மறுக்கின்றனர். எனவே, தடை உத்தரவை மாற்றி அமைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் பாலகங்கா, அருள்மொழிதேவன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன.

அப்போது மனுதாரர் பாலகங்கா சார்பில் மூத்த வக்கீல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, ‘முறையான விண்ணப்பம் செய்து, அனுமதி பெற்று சட்டப்படி ஜெயலலிதா பிறந்தநாள் பேனர்கள் வைக்க அனுமதிக்க வேண்டும்’ என்று வாதிட்டார்.

நோட்டீஸ்

இதையடுத்து, இந்த மனுக்களுக்கும், ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளுக்கும் பதில் அளிக்கும்படி தமிழக அரசு, உள்ளாட்சி அமைப்புகள், அனைத்து அரசியல் கட்சிகள், டிராபிக் ராமசாமிக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற மார்ச் 15–ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் செய்திகள்