பயங்கரவாத தாக்குதலில் பலியான தமிழக வீரர் சிவச்சந்திரன் உடலுக்கு நிர்மலா சீதாராமன் மரியாதை

திருச்சி விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள சிவசந்திரனின் உடலுக்கு, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

Update: 2019-02-16 06:29 GMT
திருச்சி,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களின் மீது நேற்று முன்தினம் வெடிகுண்டு நிரப்பிய சொகுசு காரை மோதவிட்டு பயங்கரவாதி நடத்திய திடீர் தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 

அவர்களில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே சவலாப்பேரி மேலதெருவைச் சேர்ந்த கணபதி மகன் சுப்பிரமணியன் (வயது 30) வீர மரணம் அடைந்தார்.  இதேபோல் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் சிவசந்திரனும் வீர மரணம் அடைந்தார்.  அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தை சேர்ந்தவர் சிவசந்திரன். 

வீர மரணம் அடைந்த வீரர் சிவச்சந்திரன் உடல்  இன்று காலை 11 மணியளவில் விமானம் மூலமாக திருச்சி கொண்டு வரப்பட்டது. திருச்சியில் இருந்து வீரரின் உடல் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்பட்டது. முன்னதாக விமான நிலையத்தில்,  சிவச்சந்திரன் உடலுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மரியாதை செலுத்தினார்.  சிவசந்திரனின் உடலுக்கு, தமிழக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழிசை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து சிவச்சந்திரனின் உடல் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. 

காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த மற்றொரு தமிழக வீரரான சுப்பிரமணியனின் உடல் மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்படது. அங்கிருந்து அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. மதுரை விமான நிலையத்தில், சுப்பிரமணியனின் உடலுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். 

மேலும் செய்திகள்