ஜெயலலிதா - ரஜினிகாந்த் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா மற்றும் ரஜினிகாந்த் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

Update: 2019-03-05 23:30 GMT
சென்னை, 

சென்னை, போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா மற்றும் ரஜினிகாந்த் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக கோவையை சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

போனில் மிரட்டில்

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை 6 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் போனில் பேசினார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா வீட்டிலும், அப்பகுதியில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிலும் சற்று நேரத்தில் குண்டு வெடிக்கப்போகிறது என்று கூறி விட்டு மர்ம நபர் போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

உடனடியாக ஜெயலலிதா மற்றும் ரஜினிகாந்த் வீடுகளுக்கு போலீசார் விரைந்தனர். அங்கு அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தினார்கள். ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. அது மிரட்டல் என்று தெரியவந்தது.

கோவை வாலிபரிடம் விசாரணை

இதுதொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பேசிய நபர் கோவையை சேர்ந்த வாலிபர் என்று தெரியவந்தது.

சென்னை, போலீசார் கொடுத்த தகவலின் பேரில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் பிடித்தனர். அவருடைய பெயர் முகமது அலி என்று தெரியவந்தது. அவர் மனஅழுத்தம் காரணமாக இவ்வாறு மிரட்டல் விடுத்து பேசியது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்