முதல்வர், துணை முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஆளுநருக்கு ஆர்.எஸ்.பாரதி கடிதம்

தலைமை செயலகத்தை கட்சிப் பணிக்கு பயன்படுத்திய முதல்வர், துணை முதல்வர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக ஆளுநருக்கு தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தியுள்ளார்.

Update: 2019-03-09 06:27 GMT
சென்னை,

இதுதொடர்பாக ஆர்.எஸ்.பாரதி  இன்று  தமிழக ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில், "மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்கும் ஒருவர், அவர் அமர்ந்து பணியாற்றும் அரசின் தலைமை செயலகத்தை, அரசுப் பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டுமென்பது விதிமுறை.

தமிழக அரசின் முதல்வரான எடப்பாடி பழனிசாமி சட்ட விதிமுறைகளுக்கு எதிராகவும்,  தான் பதவியேற்கும் போது எடுத்த பதவி பிரமாண உறுதிமொழிக்கு எதிராகவும் செயல்பட்டு, அ.தி.மு.க. கட்சிப் பணிகளுக்காக, தலைமை செயலகத்தை, அதிகார துஷ்பிரயோகப்படுத்தி இருக்கிறார். இதற்கு துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வமும் துணை போயிருக்கிறார்.

அ.தி.மு.க.விலிருந்து விலக்கி வைக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமியை தேர்தல் நெருங்கும் இவ்வேளையில் மீண்டும் கட்சியில் இணைக்கும் செயலை தலைமை செயலகத்தில் செய்துள்ளனர். இந்நிகழ்ச்சி குறித்து தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் செய்திகள் வெளிவந்துள்ளன.

அ.தி.மு.க.வுக்கு என தலைமைக்கழக அலுவலகம் சென்னையிலேயே, அதுவும் தலைமை செயலகத்திலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் போது, அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும்,  ஒருங்கிணைப்பாளராக இருக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தங்களது அதிகாரத்தை துஷ்பிரயோகப்படுத்தி, அரசியல் பணிகளுக்காக அரசு தலைமை செயலகத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

அரசு தலைமை செயலகத்தை அரசியல் பணிகளுக்காக பயன்படுத்தக் கூடாது என்ற அடிப்படை விதிகள் கூட அறியாமல் முதல்வராக பொறுப்பு வகித்து வரும் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வமும், தாங்கள் வகித்து வரும் அரசு பதவிகளையே தரக்குறைவாக்கி விட்டனர்.

தமிழக அரசின் தலைமை செயலாளராவது அவர்களுக்கு அந்த அடிப்படை விதிமுறையை சுட்டிக்காட்டியிருக்க வேண்டும். தலைமை செயலகத்தை தவறாக பயன்படுத்தினால், அதற்கு தலைமை செயலாளரும் பொறுப்பாவார். 

தமிழக ஆளுநர்  இப்பிரச்சினையில் தலையிட்டு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமிருந்தும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்தும் தமிழக அரசின் தலைமை செயலாளரிடமிருந்தும்  உடனடியாக விளக்கம் கேட்டு, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. சார்பில் கேட்டுக் கொள்கிறேன்" என  ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்