தேர்தல் விதிகளை மீறியதாக தொடரப்பட்ட 1,548 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

தேர்தல் விதிகளை மீறியதாக தொடரப்பட்ட 1,548 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.

Update: 2019-03-09 20:00 GMT
சென்னை, 

தேர்தல் விதிகளை மீறியதாக தொடரப்பட்ட 1,548 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.

குறைவான வாக்குப்பதிவு

சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவதாவது:-

தேர்தல் நாளன்று வாக்களிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் போஸ்டர்களை, தமிழகத்தில் முக்கிய இடங்களில், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் வைக்க இருக்கிறோம்.

கடந்த தேர்தலில் குறைவான வாக்குகள் பதிவான பகுதிகளில் வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி, ஓட்டு போடுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு (கலெக்டர்) தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

53 பேருக்கு தடை

தேர்தலில் போட்டியிட்டு, தேர்தல் செலவுக்கணக்கை காட்டாத வேட்பாளர்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும். அந்த வகையில் 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, செலவுக்கணக்கை காட்டாத 53 பேருக்கு, நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 3,746 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் 2,957 வழக்குகளில் குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்டது. அதில் 1,548 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 902 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. 507 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்