மக்கள் நீதி மய்யம் கட்சியில் வேட்பாளர்கள் நேர்காணல் கமல்ஹாசன் முன்னிலையில் நடந்தது

மக்கள் நீதி மய்யம் கட்சியில் வேட்பாளர்கள் நேர்காணல் கமல்ஹாசன் முன்னிலையில் நடந்தது.

Update: 2019-03-11 22:30 GMT
சென்னை,

நாடாளுமன்ற தேர்தல்களத்தை மக்கள் நீதி மய்யம் சந்திக்கும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்தார். இதையடுத்து தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்களிடம் இருந்து கடந்த மாதம் 25-ந் தேதி முதல் 7-ந்தேதி வரை விருப்ப மனு பெறப்பட்டது.

புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட 1,137 பேர் விருப்ப மனு அளித்தனர். அவர்களிடம் 11-ந்தேதி (அதாவது, நேற்று) முதல் 15-ந்தேதி வரை நேர்காணல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

12 தொகுதிகளுக்கு...

அதன்படி சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வேட்பாளர்கள் நேர்காணல் தொடங்கியது.

திருச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், ஆரணி, சிதம்பரம், புதுச்சேரி, ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், அரக்கோணம், வடசென்னை, மத்தியசென்னை, தென்சென்னை ஆகிய 12 தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்களிடம் மட்டும் நேற்று நேர்காணல் நடத்தப்பட்டது.

கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவரும், வேட்பாளர் தேர்வு குழுத் தலைவருமான டாக்டர் ஆர்.மகேந்திரன் நேர்காணலை நடத்தினார். அப்போது நடிகை கோவை சரளா, ஓவியர் மதன் உள்பட கட்சியின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

என்னென்ன கேள்விகள்?

வேட்பாளர் நேர்காணலில், தேர்தலில் எவ்வளவு செலவு செய்வீர்கள்? சொத்து, பண பலம்? போன்ற வழக்கமான கேள்விகள் இடம் பெறவில்லை. கல்வி தகுதி, தொகுதியில் உள்ள பிரச்சினைகள் போன்றவற்றை முன்னிறுத்தியே கேள்விகள் இடம் பெற்றதாக நேர்காணலில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

நேர்காணலில் கலந்து கொண்டவர்களுக்கு ‘இந்திய அரசியலமைப்பு சட்டம்’ புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்