பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு : சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவு

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2019-03-12 11:31 GMT
சென்னை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாணவிகளிடம் பேஸ்புக்  மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து அவர்களிடம் பணம் பறித்துள்ளனர். இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவங்களை வீடியோவும் எடுத்து உள்ளனர்.

இதில் சபரிராஜன் (வயது 25), திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கோவையில் இந்த கும்பலிடம் சிக்கி பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் காவல் நிலையம் சென்ற பின்னர்தான் இவ்விவகாரம் தொடர்பான அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த கொடூரக் கும்பல் 200-க்கும் அதிகமான பெண்களை காதல் என்ற வலையை வீசி கொடூரமான முறையில் நடத்தியதும், வீடியோ எடுத்ததும் தெரிய வந்தது. இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. 

இந்த நிலையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.  இந்த வழக்கில்  முறையாக விசாரணை நடைபெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி டி.கே.ராஜேந்திரன் நடவடிக்கை எடுத்துள்ளார். விரைவில் பெண் எஸ்.பி. தலைமையில் விசாரணை தொடங்கும் என தெரிகிறது.

முன்னதாக, இந்த வழக்கில் கைதான 8 பேரில் 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு  மாற்ற தமிழக அரசு முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி  உள்ளது.

மேலும் செய்திகள்