கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் திருநாவுக்கரசின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவு

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் திருநாவுக்கரசின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஆறுமுகம் உத்தரவிட்டார்.

Update: 2019-03-12 22:00 GMT
பொள்ளாச்சி,

பொள்ளாச்சியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் கடந்த 25-ந் தேதி சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். போலீசார் கைது செய்வதை அறிந்ததும் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு போலீசில் சிக்காமல் தலைமறைவானார்.

இதற்கிடையில் திருப்பதியில் இருந்து மாக்கினாம்பட்டியில் உள்ள வீட்டிற்கு கடந்த 5-ந் தேதி திருநாவுக்கரசு வந்த போது போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிபதி ஆறுமுகம் முன்னிலையில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் திருநாவுக்கரசுவுக்கு ஜாமீன் கேட்டு அவரது தாய் லதா பொள்ளாச்சி ஜே.எம். 1 மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கடந்த 6-ந் தேதி மனு தாக்கல் செய்தார்.

தள்ளுபடி செய்து உத்தரவு

அந்த மனுவில் தனது மகனுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் விபத்து ஏற்பட்டது. அப்போது தலையில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெற்று வருகிறான். திருநாவுக்கரசின் புகைப்படத்துடன் மகள் போட்டோவும் சேர்ந்து வெளியானதால் அவள் தற்கொலைக்கு முயற்சி செய்தாள். எனவே மகன் திருநாவுக்கரசின் உடல்நிலையை கருத்தில்கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. விசாரணை முடிவில், கைதான திருநாவுக்கரசிடம் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அந்த செல்போனில் உள்ள வீடியோக்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஆய்வு அறிக்கை வந்த பிறகே குற்றத்தின் தன்மை புரியும். மேலும் திருநாவுக்கரசு வெளியே வந்தால் சாட்சிகளை கலைக்க கூடிய சூழ்நிலை ஏற்படும். எனவே அவரை ஜாமீனில் வெளியே விட முடியாது என்று கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஆறுமுகம் உத்தரவிட்டார்.

குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

இந்த நிலையில் கைதான 4 பேரும் ஜாமீனில் வெளியே வந்தால் சாட்சியங்களை அழித்து விடுவார்கள் என்பதால் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பாக பொள்ளாச்சி போலீசாரும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜனிடம் அறிக்கை சமர்ப்பித்தனர்.

எனவே அவர் இது தொடர்பாக கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணிக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுத்து திருநாவுக்கரசு உள்பட 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். தற்போது அவர்கள் கோவை மத்திய சிறையில் இருப்பதால், அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான நகலை போலீசார் அவர்கள் 4 பேரிடம் வழங்கினார்கள்.

திருநாவுக்கரசு தாயிடம் பொதுமக்கள் வாக்குவாதம்

பொள்ளாச்சி ஜே.எம். 1 மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கோவை சிறையில் அடைக்கப்பட்டு உள்ள திருநாவுக்கரசுக்கு ஜாமீன் கேட்டு அவரது தாய் லதா மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த நிலையில் மனு மீதான விசாரணை நேற்று நடைபெறுவதை அறிந்ததும், ஏராளமான வக்கீல்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அங்கு திரண்டனர். விசாரணை முடிந்ததும் திருநாவுக்கரசின் தாய் லதா கோர்ட்டை விட்டு வெளியே வந்தார்.

அப்போது அவரிடம் பொதுமக்கள், வக்கீல்கள் சேர்ந்து உன் மகன் செய்த காரியத்துக்கு ஜாமீன் மனு தாக்கல் செய்ய எப்படி மனசு வந்தது? என்று கேட்டனர். அதற்கு அவர் என் மகன் எந்த தவறும் செய்யவில்லை. என் மகன் மீது போலீசார் பொய் வழக்கு போட்டு உள்ளனர். அவனுக்காக வந்ததற்கு வெட்கப்படவில்லை. விபத்தில் சிக்கி கடந்த 2 ஆண்டுகளாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது, மற்றவர்கள் துன்புறுத்தும் போது யாரும் வரவில்லை. உங்களால் தான் என் குடும்பத்துக்கே அவமானம். வாங்க எல்லாரும் என்னை அடிங்க என்று தலையில் அடித்துக் கொண்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் சத்தம் போட்டப்படி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் காரணமாக கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்