அரசு டாக்டர்கள் ஏழைகளுக்கு மருத்துவ சேவை வழங்குவது கடமை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

மருத்துவ நிபுணத்துவ படிப்பை மக்களின் வரிப்பணத்தில் படித்துவிட்டால், ஏழை மக்களுக்கு மருத்துவ சேவை செய்வது அரசு டாக்டர்களின் கடமை ஆகும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-03-13 21:30 GMT
சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், டாக்டர் சிலம்பன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

பெற்றோர் உடல்நலம்

சென்னை மருத்துவ கல்லூரியில் ஆசிரியராக கடந்த 1993-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை பணியாற்றினேன். என் பெற்றோருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவர்களை பார்த்துக் கொள்வதற்காக கடந்த 2010-ம் ஆண்டு என் பதவியை ராஜினாமா செய்து, டீனுக்கு கடிதம் அனுப்பினேன்.

ராஜினாமா கடிதத்தை ‘டீன்’ ஏற்றுக் கொண்டிருப்பார் என்று நினைத்தேன். ஆனால், கடந்த 2011-ம் ஆண்டு டீன் எனக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பியுள்ளார். மேலும், என்னுடைய பாஸ்போர்ட்டை ஏன் முடக்கக்கூடாது என்று தென்மண்டல பாஸ்போர்ட் அதிகாரியும் விளக்கம் கேட்டுள்ளார். எனவே, என் ராஜினாமா கடிதத்தை ஏற்கும்படி சென்னை மருத்துவ கல்லூரி டீனுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

மக்கள் வரிப்பணம்

இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசிடம் எந்த ஒரு அனுமதியையும் பெறாமல், மனுதாரர் இலங்கைக்கு கடந்த 2011-ம் ஆண்டு சென்று வந்துள்ளார். மக்களின் வரிப்பணத்தில், அரசு கல்லூரிகளில் பல்வேறு மருத்துவ படிப்புகளை படிக்கின்றனர். பண வசதி இல்லாமல், அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் ஏழைகளுக்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் மருத்துவத்தை படித்து மருத்துவ அறிவை பெறுகின்றனர். ஆனால், இவ்வாறு பெற்ற அனுபவத்தை தொடர்ந்து ஏழைகளுக்கு சேவை வழங்க டாக்டர்கள் மறுக்கின்றனர்.

ஏழைகளின் உடல்

மருத்துவ நிபுணத்துவ படிப்பை மக்களின் வரிப்பணத்தில் படித்துவிட்டால், ஏழை மக்களுக்கு மருத்துவ சேவை செய்வது அவர்களது கடமை ஆகும். ஏழைகளின் பிணத்தை கூறுபோட்டு மருத்துவம் படிக்கின்றனர். அரசு ஆஸ்பத்திரியில் அனைத்து சலுகைகளையும் பெறுகின்றனர். ஆனால், ஏழைகளுக்கு சேவை செய்ய மறுப்பதை ஏற்க முடியாது. அந்த ஏழைகளும், இந்த அரசு ஆஸ்பத்திரியின் டாக்டர்களின் கருணையில் தான் உள்ளனர்.

மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. மனுவை தள்ளுபடி செய்கிறேன். மனுதாரர் மீது அனைத்து வகையான ஒழுங்கு நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுக்க வேண்டும். இதற்காக இந்திய மருத்துவ கவுன்சிலை அரசு அணுகவேண்டும். மேலும், அரசு டாக்டர்களின் வருகை பதிவேடு, அரசு டாக்டர்களின் பணி செயல்பாடு, ஆஸ்பத்திரி பராமரிப்பு ஆகியவற்றை ஆய்வு செய்ய ஒரு குழுவை தமிழக அரசு உருவாக்கவேண்டும்.

மக்களின் வரிப்பணத்தில் மருத்துவ முதுகலை படிப்புகளை படித்துவிட்டு, பணி செய்ய வராமல், விதிகளை மீறி செயல்படும் அரசு டாக்டர்களிடம் இருந்து தமிழக அரசு உரிய இழப்பீடு பெற நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்