வங்கி கிளைகளுக்கு வேனில் கொண்டு சென்ற ரூ.1 கோடி பறிமுதல் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை

தலைமை அலுவலகத்தில் இருந்து வங்கி கிளைகளுக்கு வேனில் எடுத்துச்சென்ற ரூ.1 கோடியே 4 லட்சம் பணத்தை, உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-03-19 00:00 GMT
பூந்தமல்லி, 

நாடாளுமன்ற தேர்தலோடு பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெறாமல் இருப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் சார்பில் தேர்தல் கண்காணிப்பு நிலைக்குழு மற்றும் பறக்கும் படையினர் தொடர்ந்து வாகன சோதனை மற்றும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை அருகே நேற்று தேர்தல் கண்காணிப்பு நிலைக்குழு அலுவலர் செல்லப்பாண்டியன் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஏ.டி.எம்.களில் பணம் நிரப்ப வரும் வாகனம் வந்தது.

சந்தேகத்தின்பேரில் அந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தில், பணத்தை கையாளும் அலுவலர் விஜயகாந்த், துப்பாக்கி ஏந்திய 2 பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் டிரைவர் அன்பு ஆகியோர் இருந்தனர்.

அவர்களிடம் விசாரித்தபோது, அந்த வாகனத்தில் ரூ.1 கோடியே 4 லட்சம் இருப்பதாகவும், அடையாறில் உள்ள ஆக்சிஸ் வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்து அந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுகோட்டை, வேலூர், காட்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள அந்த தனியார் வங்கியின் கிளைகளுக்கு எடுத்துச்செல்வதாகவும் தெரிவித்தனர்.

ஆனால் அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை. இதையடுத்து ரூ.1 கோடியே 4 லட்சத்துடன் அந்த வாகனத்தை தேர்தல் கண்காணிப்பு நிலைக்குழு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த வாகனத்தை பூந்தமல்லியில் உள்ள தாசில்தார் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

வாகனத்தில் உள்ள பணம் எண்ணி சரிபார்க்கப்பட்டு அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும். இது தொடர்பாக தனியார் வங்கி சார்பில் உரிய ஆவணங்களை கொடுத்த பிறகு, அவை ஆய்வு செய்யப்பட்டு ஆவணங்கள் சரியாக இருந்தால் பணம் மீண்டும் தனியார் வங்கியிடமே ஒப்படைக்கப்படும் என தேர்தல் நடத்தும் அலுவலர் ரத்னா தெரிவித்தார்.

அதேபோல் காவல்சேரி பகுதியிலும் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 13 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்