நயன்தாரா குறித்து ராதாரவி சர்ச்சைக்குரிய பேச்சு; சின்மயி, விக்னேஷ் சிவன் கண்டனம்

நயன்தாரா குறித்த ராதாரவியின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு சின்மயி, விக்னேஷ் சிவன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Update: 2019-03-24 09:43 GMT
கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நயன்தாரா குறித்து ராதாரவி மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் கண்டனங்களுடன் பகிர்வு செய்யப்பட்டு வருகிறது. “சினிமாத்துறையில் எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றவர்கள் எல்லாம் ஒரு லெஜண்ட் ஆவார்கள். அவர்கள் சாகா வரம் பெற்றவர்கள். அவர்களுடன் எல்லாம் ஒப்பிடுவது மிகவும் வருத்தம் அளிக்கிறது. நயன்தாரா நல்ல நடிகை, இவ்வளவு நாள் திரையுலகில் நிலைப்பதே பெரிய விஷயமாகும். அவரைப் பற்றி வராத செய்தியே கிடையாது. அதெல்லாம் தாண்டி நிற்கிறார்கள். 

தமிழ்நாட்டு மக்கள் எப்போதுமே ஒரு விஷயத்தை 4 நாட்கள் மட்டுமே ஞாபகம் வைத்திருப்பார்கள். பிறகு விட்டுவிடுவார்கள். நயன்தாரா ஒரு பக்கம் பேயாகவும் நடிக்கிறார். இன்னொரு பக்கம் சீதாவாகவும் நடிக்கிறார். முன்பெல்லாம் சாமி வேஷம் போட வேண்டும் என்றால் கே.ஆர்.விஜயாவை தான் தேடுவார்கள். ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம், பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம் என பேசியுள்ளார். அவருடைய இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து நெட்டிசன்கள் வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள். 

சின்மயி காட்டம்

ராதாரவியின் இந்த பேச்சுக்கு பாடகி சின்மயி மற்றும் நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  சின்மயி விவகாரத்தில் ராதா ரவி பேசியதும் சர்ச்சையாகியது. இப்போது சின்மயி சரமாரியான கேள்வியை எழுப்பியுள்ளார். 

 “என்னுடைய பிரச்சனையில் தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏனென்றால் வேறு யூனியன் விஷயத்தில் தலையிட முடியாது என்ற காரணத்தால். ஆனால் இப்போது அந்த நபர் மிகவும் வெற்றிகரமாக தன்னை நிரூபித்த நடிகையையல்லவா மேடையில் இப்படி பேசியுள்ளார். இப்போதாவது நடவடிக்கை எடுங்கள். ‘முடிந்தால் எடுங்கள்’ என கேட்டுக்கொண்டுள்ளார்.

அந்த நடிகையை ராதாரவி தரக் குறைவாகப் பேசுகிறார். 

 ஒருவரும் ஒரு வார்த்தைகூட கண்டனம் தெரிவிக்கவில்லை. அப்புறம் கூப்பிடுறவுங்க கூப்பிடுவாங்கன்னு சொல்றாரே ராதாரவி, அந்த கூப்பிடுற ஆம்பளைங்க யாரு? அவங்கள தானே அசிங்கப்படுத்தணும்? என்று டுவிட்டரில் கேள்வியை எழுப்பியுள்ளார். 

விக்னேஷ் சிவன் கண்டனம்

ராதாரவியின் பேச்சு குறித்து நயன்தாராவின் காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். 

ஒரு பாரம்பரியமான குடும்பத்திலிருந்து வந்தவரிடம் பேசிய அருவருப்பான கருத்துகளுக்கு எதிராக யார் நடவடிக்கை எடுப்பார்களோ? யார் எனது கண்டன குரலுக்கு ஆதரவு கொடுப்பார்களோ? எனக்கு எந்தஒரு துப்புமில்லை, ஆதரவுமில்லை. மூளையற்ற நபர், தன் மீதான கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக இதனை செய்கிறார். இதில் வேதனையளிக்கும் விஷயம், அவருடைய கீழ்தரமான கருத்தை அங்கிருந்தவர்கள் கைத்தட்டி, சிரித்து கேட்பது. இப்படி ஒரு நிகழ்ச்சி முடிவுறாத ஒரு படத்துக்காக நடக்கிறது என்று எங்கள் யாருக்கும் தெரியாது.

இப்படத்தை தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னரே கைவிட்டுவிட்டனர் என்றுதான் நான் நினைத்தேன். இப்போது நடந்தது சற்றும் பொருத்தமில்லாத நிகழ்ச்சியாகும். தேவையற்ற நபர்கள் கலந்து கொண்டு என்ன பேசுகிறோம் என்று தெரியாமலயே பேசியுள்ளனர். இதுதான் ஒரு படத்தை புரமோட் செய்யும் விதம் என்றால் இனி இது போன்ற நிகழ்ச்சிகளில் இருந்து விலகி நிற்பதே நலம் என கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், என்ன நடந்தாலும் அவர் மீது நடிகர் சங்கத்தை சேர்ந்தவர்களோ அல்லது வேறு எந்த சங்கத்தைச் சேர்ந்தவர்களோ நடவடிக்கை எடுக்கப்போவதில்லை. பரிதாப நிலை என்று காட்டமாக பதிவு செய்துள்ளார்.

ராதாரவியின் பேச்சுக்கு பல்வேறு தரப்பில் கண்டனங்கள் டுவிட்டரில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்