அமைச்சர்களுக்கும் கொலை மிரட்டல் கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்

அமைச்சர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதோடு, கவர்னர் மாளிகையை வெடிகுண்டு வைத்து தகர்ப்பதாக வந்த மர்ம கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. கடிதம் எழுதியவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

Update: 2019-03-26 23:46 GMT
ஆலந்தூர்,

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு கடந்த 23-ந் தேதி மர்ம கடிதம் ஒன்று வந்தது. அந்த கடிதம் சரவணபிரசாத் என்ற பெயரில் எழுதப்பட்டு இருந்தது.

கடிதத்தை பிரித்து பார்த்த கவர்னர் மாளிகை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதில், கவர்னர், தமிழக அமைச்சர்கள் பற்றி தரக்குறைவான வார்த்தைகளில் எழுதப்பட்டு இருந்தது. அவர்கள் கொல்லப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் கவர்னர் மாளிகை மற்றும் அரசு அலுவலகங்களை குண்டு வைத்து தகர்ப்போம் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதுபற்றி கவர்னர் மாளிகை அதிகாரிகள் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் தெரிவித்தனர். போலீஸ் கமிஷனர் உத்தரவின்பேரில், கிண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து கடிதம் எழுதிய மர்ம நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்றும் விசாரணை நடத்தி வருகிறார். மேலும் கடிதம் எங்கிருந்து வந்துள்ளது? என்று அதில் இருந்த முத்திரையை வைத்து விசாரித்து வருகிறார்.

கடிதம் எழுதிய மர்ம நபரை பிடிக்க அடையாறு போலீஸ் துணை கமிஷனர் சேஷாங்சாய் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வை பிடிக்காத நபர் தான் இந்த கடிதத்தை அனுப்பி இருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் மிரட்டல் ஆசாமி பிடிபட்டால் தான் கடிதத்தின் முழுபின்னணி தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

மிரட்டல் காரணமாக கிண்டி கவர்னர் மாளிகையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கிண்டி மற்றும் கோட்டூர்புரம் போலீசார் கவர்னர் மாளிகையை சுற்றியுள்ள பகுதியில் ரோந்து பணியையும் தீவிரப்படுத்தி உள்ளனர்.

தேர்தல் நேரத்தில் அமைச்சர்களுக்கு கொலை மிரட்டலும், கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டலும் விடுக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்