பொள்ளாச்சி விவகாரம்: யூ டியூப் நிறுவனத்திற்கு சிபிசிஐடி மீண்டும் கடிதம்

பொள்ளாச்சி விவகாரத்தில் யூ டியூப் நிறுவனத்திற்கு சிபிசிஐடி மீண்டும் கடிதம் அனுப்பி உள்ளது.

Update: 2019-03-30 06:04 GMT
சென்னை,

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ் மற்றும் வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்து உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

இதற்கிடையே பாதிக்கப்பட்ட இளம்பெண்களின் வீடியோக்கள் பேஸ்புக், வாட்ஸ்-அப், யூ-டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பரவுவதை தடுக்க வேண்டும் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் யூ-டியூப், பேஸ்புக், வாட்ஸ் -அப் நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பினர்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு யூ-டியூப்பில் மீண்டும் ஒரு ஆடியோ பரவியது. அதில் பொள்ளாச்சி கும்பலால் பாதிக்கப்பட்டவர் என கூறி ஒரு இளம்பெண் பேசினார்.

அதில், பொள்ளாச்சி கும்பல் ஒரு சிறுமியை விடிய, விடிய பாலியல் பலாத்காரம் செய்ததில் சிறுமி இறந்து விட்டதாகவும், சிறுமியின் உடலை திருநாவுக்கரசு வீட்டின் பின்புறம் புதைத்து விட்டதாகவும் கூறி இருந்தார். இது இவ்வழக்கில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த ஆடியோவின் உண்மை தன்மை குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் யூ-டியூப் நிறுவனத்துக்கு மீண்டும் ஒரு கடிதம் அனுப்பி உள்ளனர். அதில், வழக்கில் சம்பந்தப்பட்ட ஆடியோவை யூ-டியூப்பில் பதிவு செய்தவர் பற்றிய தகவலை தெரிவிக்குமாறு கேட்டுள்ளனர்.

ஏற்கனவே, பொள்ளாச்சி சம்பவம் தொடர்புள்ள வீடியோக்களை நீக்கக்கோரி கடிதம் அனுப்பியதில் 90 சதவீத வீடியோக்கள் நீக்கப்பட்டுவிட்டதாகவும், மார்பிங் செய்த ஒரு சில வீடியோக்கள் மட்டும் இருப்பதாக யூ-டியூப் நிறுவனம் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு விளக்கம் அளித்துள்ளது.

மேலும் செய்திகள்