கோடநாடு விவகாரம்; முதல் அமைச்சரும், ஸ்டாலினும் தனிநபர் தாக்குதலில் ஈடுபட வேண்டாம்: உயர் நீதிமன்றம்

கோடநாடு விவகாரத்தில் முதல் அமைச்சரும், ஸ்டாலினும் தனிநபர் தாக்குதலில் ஈடுபட வேண்டாம் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Update: 2019-04-08 14:03 GMT
சென்னை,

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேசியதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு சார்பில் சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த கோர்ட்டு, மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி மு.க. ஸ்டாலின் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மு.க. ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது.

இந்த தடையை நீக்கக்கோரி தமிழக அரசு தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  அந்த மனுவில், “அவதூறு வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் கோடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி தேர்தல் பிரசாரத்தின் போது மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருகிறார். ஒரு விவகாரம் தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருக்கும்போது அதுதொடர்பாக பேசுவது நீதி பரிபாலனத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, தேர்தல் பிரசாரத்தின் போது கோடநாடு விவகாரம் குறித்து மு.க.ஸ்டாலின் பேச தடை விதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.  அவர் கூறும்பொழுது, கோடநாடு விவகாரத்தில் முதல் அமைச்சரும், மு.க. ஸ்டாலினும் தனிநபர் தாக்குதலில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்