விபத்தில் உள்ளுறுப்புகள் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க சட்ட திருத்தம் மத்திய அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

பணியின்போது விபத்து ஏற்பட்டு உடல் உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டாலும் அந்த தொழிலாளர்களுக்கும் இழப்பீடு வழங்க ஏதுவாக உரிய சட்டத்திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வரவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-04-13 21:15 GMT
சென்னை, 

விழுப்புரம் மாவட்டம், ரெட்டிச்சாவடியை சேர்ந்த செந்தில், புதுச்சேரி வழுதாவூரில் இந்துஸ்தான் தேசிய கண்ணாடி தொழிற்சாலையில் தினக்கூலி பிளம்பராக பணிபுரிந்தார். பணியின்போது தவறி கீழே விழுந்ததில் இடது சிறுநீரகம் செயலிழந்ததால், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அவரது இடது சிறுநீரகம் அகற்றப்பட்டது.

இதையடுத்து தனக்கு இழப்பீடு வழங்கக்கோரி அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த புதுச்சேரி அரசு தொழிலாளர் காப்பீட்டு (இ.எஸ்.ஐ.,) நீதிமன்றம், ‘செந்திலுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க தொழிலாளர் காப்பீட்டு கழகத்துக்கு உத்தரவிட்டது.

வெளிஉறுப்புக்கு தான் இழப்பீடு

இதை எதிர்த்து தொழிலாளர் காப்பீட்டுக்கழகம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்தார். அப்போது தொழிலாளர் காப்பீட்டுக்கழகம் சார்பில் ஆஜரான வக்கீல், ‘உடலின் வெளி உறுப்புகள் பாதிக்கப்பட்டால் மட்டுமே இழப்பீடு வழங்க தொழிலாளர் காப்பீட்டு சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மனுதாரரான செந்திலுக்கு ஒரு சிறுநீரகம் பாதிக்கப்பட்டாலும் மற்றொறு சிறுநீரகம் இயல்பாக செயல்படுவதால் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என மருத்துவக்குழு அறிக்கை அளித்துள்ளது. எனவே இ.எஸ்.ஐ நீதிமன்றம் அவருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று வாதிடப்பட்டது.

சட்டத்திருத்தம்

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி என்.கிருபாகரன், ‘ஒரு சிறுநீரகம் இயல்பாக செயல்பட்டாலும், மனுதாரர் அறுவை சிகிச்சை செய்துள்ளதால் அவருக்கு ரூ. 2.15 லட்சத்தை தொழிலாளர் காப்பீட்டுக்கழகம் இழப்பீடாக வழங்க வேண்டும். அத்துடன் பணியின்போது விபத்து ஏற்பட்டு உடல் உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டாலும், அந்த தொழிலாளர்களுக்கும் இழப்பீடு வழங்க ஏதுவாக 1948-ம் ஆண்டு இயற்றப்பட்ட தொழிலாளர் அரசு காப்பீட்டுக்கழக சட்டத்திலும், 1923-ம் ஆண்டு இயற்றப்பட்ட தொழிலாளர் இழப்பீடு சட்டத்திலும் மத்திய அரசு உரிய சட்ட திருத்தங்களை கொண்டு வரவேண்டும்‘ என அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்