சென்னை கேளம்பாக்கத்தில் ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து நோயாளிகள் உயிர்தப்பினர்

சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருந்து பொருட்கள் எரிந்து நாசமாகின. உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதால் நோயாளிகள் உயிர்தப்பினர்.

Update: 2019-04-20 23:30 GMT
திருப்போரூர்,

சென்னை கேளம்பாக்கத்தில் செட்டிநாடு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயங்கி வருகிறது. ஏ, பி, சி, இ என 4 பிரிவுகளாக இந்த ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை 4.15 மணியளவில் ஆஸ்பத்திரியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவின் 2-வது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிதுநேரத்தில் தீ மளமளவென 3-வது தளத்திற்கும் பரவியது. இதனால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே தரைதளத்தில் இருந்த 20-க்கும் மேற்பட்ட நோயாளிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஆஸ்பத்திரி ஊழியர்கள் ஈடுபட்டனர். மேல் தளத்தில் உள்ள வார்டுகளில் இருந்த நோயாளிகளும், டாக்டர்களும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டனர்.

இதற்கிடையே தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காஞ்சீபுரம் மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் திருநாவுக்கரசு தலைமையில் சிறுசேரி மற்றும் மறைமலைநகரை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் ஆஸ்பத்திரியின் 2-வது மற்றும் 3-வது தளத்தில் இருந்த மருந்துப்பொருட்கள் மற்றும் ஆவணங்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின. தீப்பிடித்து எரிந்த சி.பிளாக் 2-வது தளம், மருந்துகளை குளிர்சாதன அறையில் பதப்படுத்தி வைக்கும் பகுதி ஆகும்.

தீ விபத்து அதிகாலை நேரத்தில் ஏற்பட்டதால் நோயாளிகள், ஊழியர்கள், டாக்டர்கள் அனைவரும் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர். இதனால் நோயாளிகள் உயிர்தப்பியதாகவும், இருப்பினும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருந்துகளும் உபகரணங்களும் எரிந்து நாசமாகி இருப்பதாகவும் மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கேளம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆஸ்பத்திரியில் உள்ள மின்சாரபெட்டியில் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்துக்கு காரணம் என்று கூறப் படுகிறது.

மேலும் செய்திகள்