காவலர் குடியிருப்புகளில் சட்ட விரோதமாக வசிப்பவர்களை அப்புறப்படுத்த வேண்டும் போலீஸ் டி.ஜி.பி.க்கு, ஐகோர்ட்டு உத்தரவு

தமிழகத்தில் காவலர் குடியிருப்புகளில் சட்ட விரோதமாக வசிப்பவர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி, போலீஸ் டி.ஜி.பி.க்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-04-25 21:00 GMT
சென்னை

தமிழகத்தில் காவலர் குடியிருப்புகளில் சட்ட விரோதமாக வசிப்பவர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி, போலீஸ் டி.ஜி.பி.க்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மிகப்பெரிய முறைகேடு

சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவலர் குடியிருப்பில் தனக்கு ஒரு வீடு ஒதுக்கீடு செய்து தரும்படி சென்னை ஐகோர்ட்டில் ரகுபதி என்ற போலீஸ்காரர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், காவலர் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்குவதில் மிகப்பெரிய முறைகேடு நடப்பதாக கருத்து தெரிவித்தார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

தமிழக காவல்துறையில் அரசு குடியிருப்பு ஒதுக்குவதில் மிகப்பெரிய விதிமீறல்கள் நடைபெறுகின்றன. பணி மூப்பு அடிப்படையில் வீடுகள் ஒதுக்காமல், உயர் அதிகாரிகளிடம் பணியாற்றுபவர்களுக்கும், உயர் அதிகாரிகளின் சிபாரிசுகளை பெற்றவர்களுக்கும் வீடுகள் ஒதுக்கப்படுகின்றன.

கடுமையான நடவடிக்கை

இதனால், வீடுகளை பெறுவதற்காக காத்திருக்கும் போலீசாருக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்படுகிறது. எனவே, இந்த விதிமீறல்களில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். உரிய வசதிகள் கிடைக்காதபோது, ஊழியர்களுக்கு மனதளவில் வேதனை ஏற்படும். அதனால்தான் அண்மை காலங்களில் காவல்துறையில் தற்கொலை சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகின்றன.

சட்ட விதிகளின் படி, இதுபோன்ற வசதிகளை முறையாக போலீஸ்காரர்களுக்கு செய்து கொடுக்கும்போது, அவர்களும் தங்களது பணிகளை திறம்பட செய்வார்கள். காவல்துறையில் பணியாற்றுபவர்களிடம் ஒழுங்கீனம் இருந்தால் அது பொதுமக்களை பாதிக்கும்.

வெளியேற்ற வேண்டும்

காவல்துறையில் வீடு கேட்டு கொடுக்கப்படும் மனுக்கள் வரிசைப்படி பரிசீலிக்கப்படுவது இல்லை. பணியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் கூட, உயர் அதிகாரிகளின் ஆதரவுடன் காவலர் குடியிருப்பில் சட்டவிரோதமாக வசித்து வருகின்றனர்.

எனவே, காவலர் குடியிருப்பில் வீடு கேட்டு ஆன்-லைன் மூலம் விண்ணப்பம் செய்வதற்கு வசதியாக, ஒரு இணையதளத்தை 2 வாரத்துக்குள் தமிழக டி.ஜி.பி. உருவாக்க வேண்டும். இதில் விண்ணப்பம் செய்த நாள், விண்ணப்பதாரரின் பதவி உள்ளிட்ட விவரங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.

மேலும், பணி நீக்கம் மற்றும் பணி ஓய்வு பெற்ற பின்னரும் காவலர் குடியிருப்புகளில் சட்டவிரோதமாக வசிப்போரை கண்டறிந்து, அவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து, வெளியேற்ற வேண்டும். அவர்கள் வசித்து வந்த வீடுகளை பணியில் இருக்கும் போலீசாருக்கு ஒதுக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் கொண்ட குழுக்களை டி.ஜி.பி. உருவாக்க வேண்டும்.

ஒழுங்கு நடவடிக்கை

வீடுகள் ஒதுக்குவதில் முறைகேடு நடப்பதாக புகார்கள் வந்தால், அதன் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிகளை மீறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையை சட்டப்படி கடுமையாக எடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்