தண்ணீரில் மூழ்கி இறந்த மார்ட்டின் உதவியாளரின் உடலில் காயம் ஏற்பட்டது எப்படி? ஐகோர்ட்டு கேள்வி

தண்ணீரில் மூழ்கி இறந்த மார்ட்டின் உதவியாளரின் உடலில் காயம் ஏற்பட்டது எப்படி? ஐகோர்ட்டு கேள்வி

Update: 2019-05-14 22:30 GMT
சென்னை, 

தண்ணீரில் மூழ்கி இறந்ததாக கூறப்படும் மார்ட்டின் உதவியாளரின் உடலில் காயம் ஏற்பட்டது எப்படி? என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

குளத்தில் பிணம் 

லாட்டரி அதிபர் மார்ட்டினின் வீடு மற்றும் அலுவலகங்களில் ஏப்ரல் 30–ந்தேதி வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, மார்ட்டின் உதவியாளரான கோவையை சேர்ந்த பழனிச்சாமியை (வயது 45) வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அதன் பிறகு அவரது பிணம் வெள்ளியங்காடு கிராமத்தில் உள்ள குளத்தில் கிடந்தது.

இதற்கிடையில், பழனிச்சாமியின் மகன் ரோஹின்குமார் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

ரத்த காயம் 

வருமான வரித்துறை அதிகாரி ராஜன் தலைமையிலான அதிகாரிகள், எங்கள் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, சாதி பெயரை சொல்லி அழைத்து, என் தந்தை பழனிச்சாமியை விசாரணைக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்த 3 நாட்கள் இரவும், பகலும் அவரிடம் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் அவர் தண்ணீர் குறைவாக உள்ள குளத்தில் பிணமாக கிடந்தார்.

அவர் தற்கொலை செய்து கொண்டதாக எழுதப்பட்ட மனுவில் என்னை கையெழுத்திடும்படி காரமடை போலீசார் கட்டாயப்படுத்தினர். ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டிருந்த என் தந்தையின் உடலை பார்த்தபோது அவருடைய முகத்தில் ரத்த காயம் இருந்தது. அதனால், பிரேத பரிசோதனை செய்யும்போது என் சார்பில் ஒரு டாக்டரை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். ஆனால், அதை ஏற்காமல், பிரேத பரிசோதனை செய்துவிட்டனர்.

சி.பி.சி.ஐ.டி. விசாரணை 

எனவே, இந்த வழக்கை காரமடை போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. அதனால், வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும். சாதி பெயரை சொல்லி திட்டியதற்காக வன்கொடுமைச் சட்டப்பிரிவையும் அந்த வழக்கில் சேர்க்க வேண்டும். என் சார்பில் ஒரு டாக்டரை நியமித்து அவர் முன்னிலையில், என் தந்தையின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர், ‘‘பழனிச்சாமியின் உடலை பிரேத பரிசோதனை செய்தபோது எடுத்த வீடியோ பதிவு, மர்மச்சாவு குறித்து ஆர்.டி.ஓ. நடத்திய விசாரணை அறிக்கை உள்ளிட்டவற்றை தாக்கல் செய்யவேண்டும். அதுவரை உடலை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.

காயம் ஏற்பட்டது எப்படி? 

இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில் அறிக்கையும், புகைப்படங்களும் தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் சங்கரசுப்பு, ‘‘பிணவறையில் உள்ள பிணத்தை பதப்படுத்தி வைக்காமல், பிணவறையின் முன்பகுதியில் உள்ள மற்றொரு அறையில் போட்டு வைத்துள்ளனர்’’ என்று கூறினார்.

இதையடுத்து போலீசார் தாக்கல் செய்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், ‘‘அதில் தெளிவான விவரங்கள் இல்லை’’ என்று கூறினர். பின்னர் நீதிபதிகள், ‘‘பழனிச்சாமி குளத்தில் மூழ்கி இறந்தால், அவரது கண்கள் பிதுங்கியும், நாக்கு வெளியில் தள்ளியும் இருப்பது ஏன்? உடலில் காயங்கள் உள்ளன. முகத்தில் ரத்த காயம் உள்ளது. இந்த காயங்கள் எப்படி வந்தது?. இதுகுறித்தும், பிணவறையில் பழனிச்சாமியின் உடலை வைக்கப்பட்டுள்ள நிலை குறித்தும் விரிவான அறிக்கையை இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்