மத்திய அரசின் விவசாயிகள், வியாபாரிகள் ஓய்வூதிய திட்டங்களுக்கு முழு ஆதரவு பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம்

மத்திய அரசின் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கான ஓய்வூதிய திட்டங்களுக்கு முழு ஆதரவு தெரிவித்து பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2019-06-03 23:15 GMT
சென்னை, 

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பிரதம மந்திரியின் கிசான் திட்ட வரம்பை தாராளமாக விரிவாக்கம் செய்ததற்கு தமிழக விவசாயிகள் சார்பில் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்தத் திட்டத்தில் நிலம் வைத்துள்ள தகுதியான விவசாயிகளின் குடும்பத்தினரும் இணைக்கப்பட்டுள்ளனர்.

அதுபோல கால்நடைகளுக்கு வரும் சில நோய்களுக்கான மொத்த செலவை ஏற்றுக்கொள்வது குறித்து மத்திய அரசு முடிவெடுத்திருப்பதற்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்.

ஓய்வூதியம்

கடைக்காரர்கள், சில்லரை விற்பனையாளர், சுயதொழில் புரிவோர் ஆகியோருக்கும் ஓய்வூதியம் கிடைக்க ஏற்பாடு செய்திருப்பது, மிகச்சிறந்த முயற்சியாகும். இந்த திட்டங்கள் மூலம் நமது சமுதாயத்தில் உள்ள அதிக மக்களுக்கு உறுதியான சமூக பாதுகாப்பு கிடைக்கும்.

உங்கள் தலைமையிலான மத்திய அரசின் இந்த முடிவுகள், விவசாயிகள், வர்த்தகர்கள், சுயதொழில் செய்வோர் மற்றும் ஒட்டுமொத்த சமுதாயத்தினருக்கும் அதிக நன்மை அளிக்கும் என்பது உறுதி.

முழு ஆதரவு

இந்த திட்டங்களை அமல்படுத்துவதில் தமிழக அரசு தனது முழு ஆதரவை அளிக்கும் என்று உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்