விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ராதாமணி மரணம் : மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ராதாமணி மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

Update: 2019-06-15 00:33 GMT
விழுப்புரம், 

2016-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்ட சபை தேர்தலில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கு.ராதாமணி (வயது 69).

விழுப்புரம் மாவட்டம் கலிஞ்சிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாமணி. இவர் விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. அவைத்தலைவராகவும் இருந்து வந்தார்.

கடந்த 1½ ஆண்டு களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மிகவும் அவதிப்பட்ட ராதாமணி, சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர், கடந்த சில மாதங் களாக அரசு நிகழ்ச்சி மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் வீட்டிலேயே இருந்தவாறு ஓய்வு எடுத்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு மீண்டும் நோய் தாக்கம் அதிகமானது. இதனால் உறவினர்கள் அவரை, புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராதாமணி எம்.எல்.ஏ. நேற்று அதிகாலை 5 மணி அளவில் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார்.

இது பற்றிய தகவல் அறிந்ததும் விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு சென்று ராதாமணியின் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

ராதாமணி மரணம் அடைந்த தகவல் கிடைத்தும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புதுச்சேரி சென்றார். பின்னர் ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு சென்று ராதாமணி எம்.எல்.ஏ.வின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

அவரை தொடர்ந்து, தி.மு.க. எம்.பி.க்கள் பொன்.கவுதமசிகாமணி, ரவிக்குமார், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் செஞ்சி மஸ்தான், உதயசூரியன், மாசிலாமணி, வசந்தம் கார்த்திகேயன், சீதாபதி சொக்கலிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர் ராதாமணியின் உடல், புதுச்சேரியில் இருந்து அவரது சொந்த கிராமமான கலிஞ்சிக்குப்பத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

ராதாமணியின் இறுதிச் சடங்கு இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. அவரது உடல் இன்று மாலை 3 மணி அளவில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது.

ராதாமணி எம்.எல்.ஏ. 2.11.1949 அன்று பிறந்தார். இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. வரை படித்தவர். விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் 1970-ம் ஆண்டில் கல்லூரி பருவத்திலேயே தி.மு.க. மாணவர் இயக்கத்தில் சேர்ந்து கட்சி பணியாற்றினார். அதன் பிறகு 33 ஆண்டுகளாக கண்டமங்கலம் ஒன்றிய செயலாளராக இருந்த இவர் 1996 முதல் 2001 வரை மாவட்ட அறங் காவலர் குழு தலைவராகவும், 2011 முதல் 2016 வரை மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக்குழு தலைவராகவும் இருந்து வந்தார்.

2011-ல் நடந்த சட்டசபை தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய ராதாமணி, கடந்த சட்டசபை தேர்தலில் அந்த தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு 63,757 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனார். அந்த தேர்தலில் அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் வேலுவை விட 6,912 வாக்குகள் அதிகம் பெற்று இருந்தார்.

திருமணமாகாத ராதாமணிக்கு ஒரு சகோதரரும், 2 சகோதரிகளும் உள்ளனர். இவர் பொன்முடி எம்.எல்.ஏ. வின் கல்லூரி கால நண்பர் ஆவார்.

சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பலம் 100 ஆக குறைந்தது

சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கு முன்பு தமிழக சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பலம் 108 ஆகவும், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பலம் 88 ஆகவும் இருந்தது.

இடைத்தேர்தலில் தி.மு.க. 13 இடங்களையும், அ.தி.மு.க. 9 இடங்களையும் கைப்பற்றிய நிலையில், தமிழக சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பலம் 117 ஆகவும், தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பலம் 101 ஆகவும் அதிகரித்தது.

இந்த நிலையில், விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ராதாமணி மரணம் அடைந்ததால், தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பலம் 100 ஆக குறைந்துள்ளது.

தி.மு.க.வின் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு 8 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். அக்கட்சியின் நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. எச்.வசந்தகுமார், நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

இதனால், நாங்குநேரி தொகுதி ஏற்கனவே காலியானதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது, விக்கிரவாண்டி தொகுதியும் அந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது. 

சட்டசபையில் கட்சிகளின் பலம்

மொத்த இடங்கள் - 234

காலியானவை - 2

தற்போதைய இடங்கள் - 232

அ.தி.மு.க. - 117

(சபாநாயகரையும் சேர்த்து)

தி.மு.க. - 100

காங்கிரஸ் - 7

இந்திய யூனியன்

முஸ்லிம் லீக் - 1

அ.ம.மு.க. - 1

முக்குலத்தோர் புலிப்படை - 1

மனிதநேய ஜனநாயக கட்சி - 1

கொங்கு இளைஞர் பேரவை - 1

அ.தி.மு.க. அதிருப்தியாளர்கள் - 3

மேலும் செய்திகள்