கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளேன் - முதலமைச்சர் பழனிசாமி பேட்டி

கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளேன் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

Update: 2019-06-15 15:44 GMT
புதுடெல்லி,

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற பின் முதலமைச்சர்  பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளை சந்தித்து தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றித் தர கோரிக்கை மனுக்களை வழங்கினேன்.  நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை செயல்படுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது. 

பிரதமர் மோடியிடம் தமிழகத்தின் கோரிக்கை மனுக்களை சமர்ப்பித்துள்ளோம். 

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது.  தமிழக திட்டங்களுக்கு உரிய அனுமதியை தர வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. 

சென்னையில் புதிய விமான நிலையம் அமைக்க பொருளாதார, தொழில்நுட்ப உதவி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது.   கன்னியாகுமரியில் இந்திய கடற்படை தளம் அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் குடிநீர் பஞ்சத்தை போக்க செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 

மேகதாதுவில் அணை கட்ட, கர்நாடகாவுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினேன். 

மேகதாது அணைக்கு கர்நாடக அரசுக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தினேன்.  கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளேன். முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தினை 152 அடி உயர்த்த அனுமதி பெற்றுத்தர கேட்டுக்கொள்ளப்பட்டது. 

தமிழகத்தின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக பிரதமர், மத்திய மந்திரிகள் கூறியுள்ளனர். 

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்