2009-ம் ஆண்டு நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் ‘விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசினேன்’ தேசத்துரோக வழக்கில் நீதிபதியின் கேள்விக்கு வைகோ பதில்

‘2009-ம் ஆண்டு நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசினேன்’ என்று தேசத்துரோக வழக்கில் நீதிபதியின் கேள்விக்கு வைகோ பதில் அளித்தார்.

Update: 2019-06-17 23:00 GMT
சென்னை, 

சென்னை ராணி சீதை மன்றத்தில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த ‘நான் குற்றம்சாட்டுகிறேன்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசியபோது விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் பேசியதாக அவர் மீது ஆயிரம் விளக்கு போலீசார் தேசத்துரோக வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்று அந்த வழக்கு நீதிபதி சாந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.


அப்போது வைகோ நேரில் ஆஜரானார். இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் அளித்த சாட்சியங்கள் அடிப்படையில் வைகோவிடம் இருந்து பதிலை பெறுவதற்காக கேள்விகள் அடங்கிய நகல் வழங்கப்பட்டது.

அந்த கேள்விகளுக்கு தனது தரப்பு விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக அளிக்க நீதிபதி அறிவுறுத்தினார். அதற்கு மறுத்த வைகோ, அனைத்து கேள்விகளுக்கும் நேரடியாக பதில் அளிப்பதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு வைகோ பதில் அளித்தார். அப்போது அவர் கோர்ட்டில் தெரிவித்ததாவது:-

நான் தமிழ் ஈழ விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசினேன்.

இலங்கையில் ஒவ்வொரு தமிழனின் சாவுக்கும் இலங்கை அரசு தான் பொறுப்பாளி. ராஜபக்சே சர்வதேச குற்றக்கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்.

நான், இந்திய அரசு மீது வெறுப்புணர்வையோ, காழ்ப்புணர்வையோ, பகை உணர்வையோ ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பேசவில்லை. இந்திய அரசு தனது கொள்கையை, அணுகுமுறையை முற்றாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று தான் பேசினேன்.

2002-ம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவையில் விடுதலைப்புலிகளை நேற்றும் ஆதரித்தேன் இன்றும் ஆதரிக்கிறேன், நாளையும் ஆதரிப்பேன் என்று பேசியதை சுட்டிக்காட்டி பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசுவது குற்றம் ஆகாது என்று தீர்ப்பு அளித்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

வைகோவின் இந்த பதிலை நீதிபதி பதிவு செய்து கொண்டார். இதன்பின்னர், அரசு தரப்பு மற்றும் வைகோ தரப்பு வாதத்துக்காக விசாரணையை 19-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதன்பின்பு கோர்ட்டில் இருந்து வெளியே வந்த வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், ‘தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் ஓட்டல்கள் எதுவும் மூடப்படவில்லை, ஐ.டி. நிறுவனங்கள் செயல்பாட்டில் பாதிப்பு இல்லை என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் கூறுவது அப்பட்டமான பொய். தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அரசு கூறுவது பொய். 9 ஆயிரம் லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுவதாக கூறுகின்றனர். ஆனால், ஒரு சில இடங்களில் மட்டுமே லாரிகளை பார்க்க முடிகிறது.

மழை பெய்த போது தண்ணீரை சேமித்து வைக்கவில்லை. தடுப்பணைகள் கட்டவில்லை. ஏரி, குளங்கள் தூர்வாரவில்லை. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று பெயரளவில் சொன்னால் மட்டும் போதாது. உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்றார்.

மேலும் செய்திகள்