மழைநீர் சேகரிப்பை தீவிர இயக்கமாக நடத்த வேண்டும் தமிழக அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் கோரிக்கை

மழைநீர் சேகரிப்பை தமிழகம் முழுவதும் தீவிர இயக்கமாக நடத்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Update: 2019-06-17 22:30 GMT
சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழை பொய்த்ததும், நடப்பாண்டில் மிகவும் கடுமையான வறட்சி நிலவுவதும் தான் இதற்குக் காரணம் என்றாலும், அனைத்துத் தரப்பினரும் சற்று பொறுப்புணர்வுடன் செயல்பட்டு இருந்தால் தமிழகத்தில் இப்போது நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்த்திருக்க முடியும்.

தமிழகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் 3 நாட்களில் மட்டும் சென்னையில் 200 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்தது. சென்னை முழுவதும் மழைநீர் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தால், அந்த மழைக்கு பல டி.எம்.சி. நீர் சேமிக்கப்பட்டிருக்கும். அது சென்னைக்கு பல மாதங்களுக்கு குடிநீரைக் கொடுத்திருக்கும். ஆனால், போதிய அளவு மழைநீர் கட்டமைப்பு வசதிகள் செய்யப்படாததால், பெய்த மழையில் பெருமளவு நீர் வீணாக கடலில் கலந்தது.

எனவே சாலைகள், பொது இடங்கள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்டவற்றிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் மழைநீரை அதிகமாக சேமிக்க முடியும். இதற்கான கட்டமைப்பு ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் தான் செய்ய வேண்டும். இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள நரேந்திரமோடி ஊராட்சித் தலைவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மழைநீர் சேமிப்பு என்பது வீட்டளவில் தொடங்கி நாட்டளவில் செயல்படுத்தப்பட வேண்டிய அவசியமான திட்டமாகும். அதன்மூலம் தான் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத தமிழகத்தை உருவாக்க முடியும். வீடுகளில் மட்டுமின்றி, பொது இடங்களிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியது கட்டாயத் தேவையாகும். இதை உணர்ந்து மத்திய அரசின் ஒத்துழைப்புடன் மழைநீர் சேகரிப்பை தமிழகம் முழுவதும் தீவிர இயக்கமாக நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்