தமிழகம், புதுவையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுவையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

Update: 2019-06-21 10:23 GMT
சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது . தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் வெப்பம் குறையும்.

கடந்த 8-ஆம் தேதி கேரளா மற்றும் தென் தமிழகத்தில் தொடங்கிய தென்மேற்கு பருவ மழையின் வடதிசை நகர்வு வாயு புயல் காரணமாக தடைப்பட்டிருந்ததாகவும் தற்போது, தென்மேற்கு பருவ மழை தமிழகத்தின் இதர பகுதிகள், ராயலசீமா மற்றும் ஆந்திர கடற்கரை பகுதிகளில் தொடங்கியுள்ளது.

நீலகிரி, திண்டுக்கல், தேனி, கோவை ஆகிய மலைப்பகுதி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரிரு முறை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் படிப்படியாக வெப்பநிலை குறையும்.

தமிழகம் மற்றும் புதுவையில் ஜூன் 1 முதல் இதுவரை இயல்பான மழை அளவு 39.6 மில்லிமீட்டர் என்ற நிலையில் இதுவரை 24 .8 மில்லிமீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது என கூறினார்.

மேலும் செய்திகள்