அத்திவரதரை தரிசிக்க சென்று உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு; முதல் அமைச்சர் அறிவிப்பு

அத்திவரதரை தரிசிக்க சென்று உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல் அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

Update: 2019-07-18 14:57 GMT
சென்னை,

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில், அத்திவரதர் கடந்த 1ந்தேதி முதல் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.  18வது நாளான இன்று அத்திவரதருக்கு கத்தரிப்பூ நிற பட்டால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.  அத்திவரதரை தரிசிக்க அதிகாலை முதலே பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த மக்கள் திரண்டுள்ளனர். கோவில் உட்பிரகாரம், 4 மாட வீதிகள், செட்டித்தெரு, அண்ணா தெரு ஆகிய வீதிகளை கடந்து 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் வரிசையில் இன்று காத்திருந்தனர்.

இந்நிலையில் வரிசையில் நின்றபோது பக்தர்கள் அதிகம் பேர் திரண்டதால் கூட்ட நெரிசலில் சிக்கிய 3 பக்தர்களுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடராஜன், கங்காலட்சுமி, நாராயணி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.  இதனிடையே மற்றொருவரும் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.  அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல் அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அத்திவரதரை தரிசிக்க, பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.  10 சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, 200 மருத்துவர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

1,200 மீட்டர் தொலைவுக்கு தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.  நேற்று வரை 25 லட்சம் பேர் அத்திவரதரை தரிசித்துள்ளனர்.  இன்று மட்டும் மாலை வரை 1.7 லட்சம் பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.  அத்திவரதரை தரிசிக்க சென்று உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்